Published : 07 Sep 2025 12:46 PM
Last Updated : 07 Sep 2025 12:46 PM
சென்னை: செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கட்சிப் பதவியையும் பறித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் முன்னாள் எம்பி ஏ.சத்தியபாமா, இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், செப்.5-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம்திறந்து பேச உள்ளதாக கூறியிருந்தார்.
அதன்படி, ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கு, வெளியே சென்றவர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். யார் யாரை இணைக்க வேண்டும் என் பதை பொதுச் செயலாளர் முடிவு செய்யலாம். மேலும், இதற்கான முயற்சியை 10 நாளில் எடுக்க வேண்டும். கட்சித் தலைமை இதை செய்யாவிட்டால், இந்த மனநிலையில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து, அதற்கான பணிகளை மேற்கொள்வோம். இந்த கோரிக்கைக்கு முடிவு வந்தால்தான், பழனிசாமியின் பிரச்சார பயணத்தில் பங்கேற்பேன்" என தெரிவித்திருந்தார்.
கே.ஏ. செங்கோட்டையனின் இந்த செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று (சனிக்கிழமை) காலை ஆலோசனை நடத்தினார். இதில், மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, கே.ஏ செங்கோட்டையனை கட்சியின் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பது தொடர்பான அறிக்கையை அதிமுக வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, கோபி சட்டமன்ற தொகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்த சிலரையும் நீக்கினார். இந்த நிலையில் கோபி சட்டமன்ற தொகுதியில் பதவி வகித்து வரும் ஒன்றிய, நகர, கிளை, கழக, பேரூர் கழக, வார்டு செயலாளர்கள் என சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் நேற்று நம்பியூர் பகுதியில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியையும் ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினர். தொடர்ந்து இன்றும் இந்த ராஜினாமா தொடர்கிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவிடம் ராஜினாமா கடிதத்தை கட்சியின் பொறுப்பாளர்கள் வழங்கி வந்தனர்.
இந்நிலையில், செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கட்சிப் பதவியையும் பறித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT