Published : 07 Sep 2025 12:00 AM
Last Updated : 07 Sep 2025 12:00 AM
சென்னை: தமிழகத்தில் கட்சி தொடங்கி 53 ஆண்டுகளை கடந்த அதிமுக, 31 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்துள்ளது. அடுத்தடுத்து ஆட்சியை பிடித்த ஒரே கட்சியும் அதிமுக தான். கட்சியை கைப்பற்றிய பழனிசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றத்தில் தொடர் வெற்றியை பெற்றாலும், பொதுத் தேர்தல்களில் தோல்வி முகமே மிஞ்சியது. 2024 தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை.
மேலும் அன்வர் ராஜா, வா.மைத்ரேயன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். கட்சி பிரிந்து கிடப்பதே அதிமுகவின் தோல்விக்கு காரணம். கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கெல்லாம் பிடிகொடுக்காத பழனிசாமி, கட்சியை ஒன்றிணைக்காமலேயே 2026-ல் அதிமுக ஆட்சியை பிடிக்க கடந்த ஜூலை மாதமே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். இந்நிலையில் ஈரோடு, கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், "கட்சியிலிருந்து வெளியே சென்றவர்களை 10 நாட்களுக்குள் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களை இணைத்து கட்சியை ஒன்றுபடுத்த நான் பாடுபடுவேன்" என தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று செங்கோட்டையனின் மாவட்ட செயலாளர் பதவி மற்றும் அமைப்பு செயலாளர் பதவிகளை பொதுச்செயலாளர் பழனிசாமி பறித்துள்ளார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 7 பேரின் பதவிகளையும் பறித்தார். இதைத் தொடர்ந்து செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர், தங்களையும் கட்சி பதவிகளில் இருந்து நீக்குமாறு பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் கட்சியின் அண்மைக்கால போக்கு பிடிக்காமல், தமிழகம் முழுவதும் கட்சி பணிகளில் இருந்து விலகியுள்ள அதிமுகவினர் செங்கோட்டையனின் வலியுறுத்தலுக்கு பலம் சேர்க்க குரல் கொடுத்து வருகின்றனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் கூறியது: பழனிசாமி தனது சுயநலத்துக்காகவே கட்சி ஒன்றிணைப்புக்கு மறுக்கிறார். கட்சி நலனுக்காக தனது பிடிவாதத்தை தளர்த்த வேண்டும். எதற்கெடுத்தாலும், அம்மாவின் அரசு, எனது தலைமையிலான அம்மாவின் அரசு என்றெல்லாம் பேசி வரும் பழனிசாமி, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை பறித்து தான் அதிமுக பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.
இச்செயலுக்கு முன்பு, சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையனின் நடவடிக்கைகள் ஒன்றுமே இல்லை. 2026 தேர்தலில் வெற்றி பெற கட்சி ஒன்றிணைப்பு அவசியம். செங்கோட்டைையனின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு கூறினர். செங்கோட்டையனின் விதித்திருக்கும் காலக்கெடு தொடர்பாக பழனிசாமி ஆதரவாளர்கள் கூறும்போது, "ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோருக்கு அதிமுகவில் இடமில்லை என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார்.
அவர்கள் இல்லாமலேயே 2026 தேர்தலில் அதிமுகவின் வெற்றியை பழனிசாமி நிலைநாட்டுவார். அதிமுக பல சோதனைகளை கடந்து, இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக கட்சி ஒற்றுமையை வலியுறுத்தி தர்மயுத்தம் செய்து வந்த பன்னீர்செல்வத்தின் நிலை, திமுகவிடம் தஞ்சமடையும் அளவுக்கு சென்றுவிட்டது. செங்கோட்டையனின் கெடுவை, பழனிசாமி பொருட்படுத்த மாட்டார். அவர் வகுத்துள்ள வழியில் அவர் பயணத்தை, தொடர்வார்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT