Published : 07 Sep 2025 12:29 AM
Last Updated : 07 Sep 2025 12:29 AM
சென்னை: லண்டன் பயணத்தின் ஒருபகுதியாக மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியதுடன், அம்பேத்கர் தங்கியிருந்தஇல்லத்தையும் பார்வையிட்டார்.
முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்றுமுன்தினம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்மேதை ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘ஆக்ஸ்போர்டு சென்று விட்டு அங்கு உறங்கும் தமிழ் மாணவரை போற்றாமல் வருவது அறமாகுமோ?’ என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘தத்துவஞானிகள் இதுவரை உலகைப் பல வகைகளில் விளக்கியுள்ளனர்; ஆனால் உழைக்கும் வர்க்கத்துக்கு ஒளி வழங்கிய சிவப்புச் சூரியனாம் மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தினேன்' என தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணல் அம்பேத்கர் லண்டனில் படிக்கும்போது தங்கியிருந்த இல்லத்தையும் அவர் பார்வையிட்டார். அதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் லண்டன் பொருளியல் பள்ளியில் (LSE) படிக்கும்போது, தங்கியிருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்இல்லத்தைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றேன். இந்தியாவில் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞன், இங்குதான் தனது அறிவால் வளர்ந்து, லண்டனில் அனைவரது மரியாதையையும் பெற்று, பின்னர் இந்தியாவின் அரசியலமைப்பையே வடித்துத் தரும் நிலைக்கு உயர்ந்தார்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT