Last Updated : 06 Sep, 2025 07:36 PM

3  

Published : 06 Sep 2025 07:36 PM
Last Updated : 06 Sep 2025 07:36 PM

“டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது” - நயினார் நாகேந்திரன்

இடது: நயினார் நாகேந்திரன் | வலது: டிடிவி தினகரன்

கோவை: “டிடிவி தினகரன் கூறும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில், நிர்வாகிகளுக்கு இரு வார சேவை பயிற்சி முகாம் ஈச்சனாரி பகுதியில் உள்ள அரங்கில் இன்று (செப்.6) தொடங்கியது. இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியது: “வரும் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, இரு வார சேவை முகாம், நலத் திட்ட உதவிகள் வழங்குவது குறித்த கூட்டத்தில் பங்கேற்றேன். பிரதமர் மோடியின் பிறந்தநாள் முதல் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி வரை நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளன.

நான் யாரிடமும் ஆணவமாக நடந்து கொள்வது இல்லை. என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு, கூட்டணி குறித்து டிடிவி தினகரன் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டிடிவி தினகரன் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார். பாஜக எப்பொழுதும் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால், அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட எண்ணம். எல்லோரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்றுதான் நான் சொல்லி வருகிறேன்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அக்கட்சியைச் சேர்ந்த செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுத்தது, அவர்களது உட்கட்சிப் பிரச்சினை. அதைப் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. என்றைக்குமே பாஜக அடுத்தக் கட்சி விவகாரங்களில் தலையிடாது. கூட்டணியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பது குறித்து கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் கூட்டணிக்கு வந்தால் நல்லது. அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. கண்டிப்பாக அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்வோம்.

எனக்கும், இதற்கு முன்னரும் தலைவராக இருந்தவர்களின் செயல்பாடுகளில் வித்தியாசம் குறித்து நீங்கள் கேட்கிறீர்கள். ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மாநிலத்தில் முதல்வராக வரக் கூடியவர் தேசிய கட்சியுடன் தொடர்பில் இருந்தால்தான் நன்மைகளை பெற முடியும். வருங்காலத்தில் பிரதமர் மோடியை நம்பி தமிழக மக்கள் வாக்களிப்பார்கள். அதற்கு அனைவரும் ஒன்றாக வரவேண்டும். நான் மாநிலத் தலைவராக வருவதற்கு முன்னரே, எனது மகன் நயினார் பாலாஜி பாஜகவில் இருக்கிறார். எனவே, இது வாரிசு அரசியல் கிடையாது” என்று அவர் கூறினார்.

‘அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பாஜக இயக்குகிறதா?’ என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ‘பாஜக யார் பின்னாடியும் இல்லை. யாரையும் தவறாக இயக்கவில்லை. என்னை பொறுத்தவரை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்” என்றார் நயினார் நாகேந்திரன்.

தினகரன் கூறியது என்ன? - முன்னதாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைதான், எங்களை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வந்தார். அவர் தலைமை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியான ஒன்றுதான்.

ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது. அவருக்கு கூட்டணிக் கட்சிகளை சரியாக கையாளத் தெரியவில்லை. இதேநிலைதான் எங்களுக்கும் ஏற்படும் என்பதால், கூட்டணியை விட்டு விலக முடிவு செய்தோம். எங்களின் முதல் முக்கியத்துவம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான். அங்கு எங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், மற்ற கூட்டணியுடன் இணைவோம். அது எந்த கூட்டணியாகவும் இருக்கலாம். நாங்கள் எதற்காகவும், யாருக்கும் அடிபணிய மாட்டோம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x