Published : 06 Sep 2025 05:24 PM
Last Updated : 06 Sep 2025 05:24 PM
திருச்சி: தவெக தலைவர் விஜய் வருகிற செப்.13-ம் திருச்சியில் சட்டப்பேரவை தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கவிருப்பது உறுதியான நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ள இடத்தில் பிரச்சாரம் செய்ய திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். தொடர்ந்து கோவை, மதுரையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தை மாநாடு போல நடத்தி காட்டினார். திருச்சியில் மாநாடு ஏற்பாடு செய்யாதது அவரது கட்சியினர் இடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
அதையடுத்து, ‘திராவிடக் கட்சிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும்’ என்று சென்ட்டிமென்ட்டாக நம்பப்படும் திருச்சியில் இருந்து விஜய் தனது சட்டப்பேரவை தேர்தல் சுற்றுப்பயணத்தை துவங்குகிறார் என்று நேற்று (5-ம் தேதி) இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டிருந்தது.
அதன்படி, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையம் எதிரேயுள்ள சித்தி விநாயகர் கோயிலில் புஸ்ஸி ஆனந்த் கொண்டு வந்த மனுவை வைத்து வழிபாடு நடத்தினார்.
அதைத்தொடர்ந்து திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு நிர்வாகிகளுடன் சென்றார். அங்கு ஆணையர் காமினியை நேரில் சந்தித்து திருச்சி மாநகரத்தில் மரக்கடை, காந்தி மார்க்கெட், பால்பண்ணை, சென்னை புறவழிச்சாலை வரை ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி கேட்டு மனு கொடுத்தார்.
ஆனால், ‘திருச்சி மாநகரம் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் தொகை அடர்த்தியான பகுதி. எனவே யாருக்கும் இங்கு ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி இல்லை’ என்று ஆணையர் தரப்பில் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். அதையடுத்து, சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரினர்.
அதற்கு, ‘திருச்சி மாநகரத்தில் மொத்தம் 45 இடங்கள் மட்டுமே பிரச்சாரத்திற்கு அனுமதிக்கப்படும். அதில் சத்திரம் பேருந்து நிலையம் இல்லை’ என்றனர். அதையடுத்து திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அல்லது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்புறம் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கோரி மனு கொடுப்பார்கள் என்று தெரிகிறது.
தற்போதைய நிலையில் வரும் செப்.13-ம் தேதி திருச்சியில் இருந்து தவெக தலைவர் விஜய் தனது சட்டப்பேரவை தேர்தல் பயணத்தை துவங்குவது உறுதியாகி உள்ளது.
ஓட்டல் கிடைக்காத சோகம்!- தவெக தலைவர் விஜய் திருச்சியில் 2 நாட்கள் தங்கியிருந்து ஒரு மாவட்டத்திற்கு இரண்டு தொகுதியில் பிரச்சாரம் செய்வதென ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசியல் நெருக்கடி, பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி, விஜய்க்கு திருச்சியில் உள்ள பிரபல ஓட்டல்கள் அறைகள் ஒதுக்க மறுத்துவிட்டன.
இதனால், சென்னையில் இருந்து அதிகாலையில் கிளம்பி திருச்சி வரும் விஜய், மீண்டும் பிரச்சாரத்தை முடித்து இரவு சென்னை திரும்புவற்கு ஏதுவாக பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி செப்.13-ம் தேதி காலை 10.35 மணியளவில் திருச்சிக்கு வருகை தரும் விஜய் மரக்கடை எம்ஜிஆர் சிலை அல்லது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பிரச்சாரம் செய்கிறார்.
முன்பாக சென்னையில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் வருகை தரும் விஜய், இங்கிருந்து தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை வரை ஊர்வலமாக வருகிறார்.
அதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் பழைய பேருந்து நிலையம், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் தொகுதியில் குன்னம் பேருந்து நிலையத்திலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார். அன்றிரவே சென்னைக்கு பிரச்சார வாகனம் மூலம் வீடு திரும்புகிறார். இதேபாணியில், ஒருநாள் விட்டு ஒருநாள் என மொத்தம் 100 நாட்கள் தொடர்ந்து விஜய் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.
கமிஷனர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு: திருச்சியில் தேர்தல் பிரச்சார அனுமதி கேட்டு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று காலை மாநகர ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவருடன் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளே செல்ல முயன்றதால் போலீஸார்- தவெகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ‘அனைவரும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. ஒரு சிலர் மட்டும் தான் மனு கொடுக்க செல்ல வேண்டும்’ என்று போலீஸார் உறுதியாக தெரிவித்தனர்.
அதையடுத்து, புஸ்ஸி ஆனந்த் உடன் மாவட்டச் செயலாளர் குடமுருட்டி கரிகாலன் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அனுமதி கேட்டு மனு கொடுத்த புஸ்ஸி ஆனந்த், விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள மரக்கடை எம்ஜிஆர் சிலை மற்றும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்புற பகுதியை நேரில் பார்வையிட்டு சென்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT