Published : 06 Sep 2025 03:13 PM
Last Updated : 06 Sep 2025 03:13 PM

கட்சி ஜனநாயகம் பற்றி மேடையில் மட்டும்தான் எடப்பாடி பேசுகிறார்: செங்கோட்டையன் விமர்சனம்

கோபி: “ஜனநாயக முறைப்படி எங்கள் கட்சியில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என மேடையில் மட்டுமே எடப்பாடி பேசுகிறார். நான் அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி பேசியது குறித்து கட்சி ஜனநாயக முறைப்படி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.” என்று தனது கட்சிப் பொறுப்புகள் பறிப்பு குறித்து செங்கோட்டையன் எதிர்வினையாற்றியுள்ளார்.

முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என தெரிவித்தேன். அதற்கு கட்சி ஜனநாயக முறைப்படி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி எங்கள் கட்சியில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என மேடையில் மட்டும் பேசுகிறார் எடப்பாடி.

அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்று தொண்டர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள். காலில் வேண்டுமானாலும் விழுகின்றேன்; இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பிரிந்து சென்றவர்கள் கூறுகின்றனர் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், புரட்சித் தலைவரால் இந்த இயக்கத்தில் தொடர்கிற என் போன்றோர் கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று கூறுவது இந்த இயக்கத்திற்கு நல்லது. அதனால்தான் இந்த கருத்தை வெளியிட்டேன். அதிமுகவை ஒருங்கிணைப்பதில் எனது பணி தொடரும்.

என்னை நீக்குவதால் கட்சிக்கு பாதிப்பா என்பதை காலம் தான் பதில் சொல்லும். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற தொண்டர்களின் கருத்தை புறக்கணிக்கிறாரா என்பதையும் பொதுச் செயலாளர் தான் தெரிவிக்க வேண்டும். பாஜகவின் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரும் எனது கருத்து நியாயமானது எனத் தெரிவித்துள்ளனர். கட்சியின் நலன் கருதி இந்தக் கருத்தை நான் வலியுறுத்துகிறேன். எனது நலன் கருதி அல்ல.” என்றார்.

அதற்கு செய்தியாளர்கள், “உங்கள் கட்சியினர் யாரும் இதுவரை உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையே? என்று வினவினர், “சிலர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள் அது காலப்போக்கில் தான் வெளிவரும்.” என்றார். கட்சியின் முக்கிய மூத்த தலைவர்களுடன் ஆலோசனை செய்த பின்னரே இந்த அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளாரா? என்ற கேள்விக்கு, “இதற்கும் காலம் தான் பதில் சொல்லும்.” என செங்கோட்டையன் கூறினார். இதனிடையே கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதை வரவேற்கும் விதமாக கோபியை அடுத்த நம்பியூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x