Published : 06 Sep 2025 06:15 AM
Last Updated : 06 Sep 2025 06:15 AM
திருவள்ளூர்: காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை உட்பட 3 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நேற்று முன் தினம் திருவள்ளூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் 17 வயது தம்பி கடந்த ஜூன் 6-ம் தேதி நள்ளிரவில் கடத்தப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கைதான 7 பேரில், விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, உறவினர்கள் கணேசன், மணிகண்டன் ஆகியோர், திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு 3 முறை மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், 4-வது முறையாக வனராஜா, கணேசன், மணிகண்டன் ஆகிய 3 பேரும் திருவள்ளூர் நீதித்துறை நடுவர் -1 நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த, மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி, வனராஜா உள்ளிட்ட 3 பேருக்கு கடந்த ஆக. 8-ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சிபிசிஐடி போலீஸார், “வனராஜா, கணேசன், மணிகண்டன் ஆகியோரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றால் அவர்கள் 90 நாட்கள் நீதிமன்ற காவலில், சிறையில் இருந்திருக்க வேண்டும். ஆனால், வனராஜா உள்ளிட்டோர் 60 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என, திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று முன் தினம் நடைபெற்றது. அதன் முடிவில், வனராஜா, கணேசன், மணிகண்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT