Published : 06 Sep 2025 09:40 AM
Last Updated : 06 Sep 2025 09:40 AM
புதுடெல்லி: தெரு நாய் விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நலச்சங்கத்தினர், தெரு நாய்களை பிடித்து செல்ல பணம் வழங்குகின்றனர். மாநகராட்சியும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள நாய்களை பிடித்து ஏழைகள், நடுத்தர வர்த்தகத்துக்கு கீழுள்ளவர்களின் பகுதிகளில் தெரு நாய்களை விட்டு விடுகின்றனர்.
இதுதான் நாய்க்கடிக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம். இந்த விஷயத்தில் நாய்க் கடிகளால் பாதிக்கப்படுவோர் யார்? ஏழைகள்தான். பணக்காரர்கள் அல்ல. பணக்காரர்கள் வசிக்கும் பகுதிகளில் நாய்கள் எண்ணிக்கை அவ்வளவாக இல்லை. ஆனால், டெல்லி ரோகிணி காலனி போன்ற இடங்களில் நாய்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
கட்டாயமாக தெரு நாய்களை இடமாற்றம் செய்வதால் 99 சதவீத நாய்க் கடி சம்பவங்கள் நடைபெறுகின்றன. தெரு நாய் விவகாரத்தில் டெல்லி மாநகராட்சி தோல்வி அடைந்துவிட்டது. நாய்களுக்கு உணவளிக்கும் இடத்தை அறிவித்து அங்கு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஒரு அறிவிப்பு பலகை கூட இதுவரை டெல்லி மாநகராட்சி வைக்கவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும். இவ்வாறு மேனகா காந்தி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT