Published : 06 Sep 2025 06:04 AM
Last Updated : 06 Sep 2025 06:04 AM
சென்னை: விபத்துகள் அதிகம் நடக்கும் 50 இடங்களில் வியாபாரிகள், காவலாளிகள், போலீஸார், இளைஞர்களுக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் அளிக்கப்படவுள்ளது. விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்தி வரும் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் நிர்வாக மாநில செயல் தலைவர் செல்வகுமார் கூறியதாவது: தமிழகத்தில் ஒரே பகுதியில் ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. அத்தகைய இடங்களில் 50 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு வியாபாரிகள், காவலாளிகள், போலீஸார் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் 50 பேருக்கு முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி வழங்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக மதுரை, திருச்சி, வேலுாரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முடித்தவர்களுக்கு அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் பயிற்சிக்கான கையேடு வழங்கப்படும். அப்பகுதியில் விபத்துகள், பாம்புக்கடி போன்ற சம்பவங்களுக்கு யாரேனும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ளும் பட்சத்தில், உடனடியாக அப்பகுதி தன்னார்வலர்கள் 50 பேருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
அருகில் இருக்கும் தன்னார்வலர்கள் சென்று முதலுதவி சிகிச்சை அளிப்பார்கள். விபத்துகளில் சிக்கியவருக்கு அருகில் உள்ளவர் அளிக்கும் உதவியும், முதலுதவி பயிற்சி பெற்றவர் அளிக்கும் உதவியும் மாறுபடும். எனவே விபத்துகளின் சிக்குபவர்களின் உயிரிழப்பைக் குறைக்கலாம். இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT