Published : 05 Sep 2025 09:26 PM
Last Updated : 05 Sep 2025 09:26 PM

ஆவணங்கள் காணாமல் போனால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலகங்களில் பட்டா உள்ளிட்ட நில உடமை ஆவணக் கோப்புகள் காணாமல் போனால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் துறை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோவையைச் சேர்ந்த பா.அன்புவேள் என்பவர் சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பேரூர் வட்டம், வடவள்ளி கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் உள்ள கோப்பினை, பார்வையிட அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் ரா.பிரியகுமார் மனுதாரர் கோரிய தகவல்கள் அடங்கிய கோப்பு, தேடிப் பார்த்ததில் கிடைக்கப் பெறவில்லை என்று தகவல் அலுவலர் வழங்கியுள்ளதை இவ்வாணையம் ஏற்க மறுப்பதகாவும் கோப்பு கிடைக்கப் பெறவில்லை என்று பொது அதிகார அமைப்பு தெரிவிக்கும் பதில் அவர்களின் அலட்சிய போக்கையும், கவனக்குறைவையும் பிரதிபலிக்கக்கூடியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு மாத காலத்திற்குள் வருவாய் கோட்டாட்சியர், கோரிய கோப்பினை மீண்டும் தேடி கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு, கிடைக்கப் பெற்றால் அதன் நகலினை மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும், கிடைக்கப் பெறவில்லை என்றால் அதற்கான விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு செயலாளர், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் கடிதம் வாயிலாக, அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்த் துறையின் கீழ் உள்ள அனைத்து நிலை அலுவலகங்களிலும் ஆவணங்களை முறையாக பராமரிக்கப்படுவது தொடர்பான நடைமுறைகளை பிறப்பித்து, அதனை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தும், கோப்புகள் காணாமல் போனால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், கோப்பு கிடைக்கப் பெறவில்லை எனில் கோப்பினை மீள உருவாக்க நேரிடும் (Reconstruction offiles) என்பதை அறிவுறுத்தியும், கோப்புகள் அழிக்கப்படும் போது பின்பற்றுவதற்கான நடைமுறைகளின் அவசியத்தை அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து அறிக்கையை பெற்று, அவற்றை இணைத்து ஒருங்கிணைந்த அறிக்கையாக நேரில் சமர்ப்பிக்குமாறு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு செயலாளருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளார்.

மனுதாரர்கள் தகவல்கள் கோரும் கோப்பு கிடைக்கப்பெறாத பட்சத்தில், அது குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்து, அதன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் அதனை தொடர்ந்து ( Non Traceable Certificate) ஆகியவற்றை பெற்று கோப்பில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் மேற்படி நில உடமை ஆவணங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட அலுவலக பதிவறையில் பராமரிக்கப்பட வேண்டிய நிரந்தர ஆவணங்களாகும் அதனை பெறுப்புடன் பாதுகாக்க வேண்டியது, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வருவாய் துறை சம்மந்தப்பட்ட அலுவலகத்தைச் சார்ந்த அதிகாரிகள் அலுவலர்களின் கடமையாகும் என உத்தரவிட்டுள்ள ஆணைய உறுப்பினர் பிரிய குமார், வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 30-ம் தேதி ஒத்திவைத்துள்ளார்.

மேற்கண்ட உத்தரவுகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற தவறினால், தகவல் பெறும் உரிமைச் சட்டம், கீழ் ரூ.25,000 அபராதம் விதிக்கவும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் மற்றும் மேல்முறையீட்டு இழப்பீடு வழங்குதல் போன்ற தண்டனை நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கவும் நேரிடும் என்று சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்களுக்கு ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x