Published : 05 Sep 2025 09:09 PM
Last Updated : 05 Sep 2025 09:09 PM
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, செங்கோட்டையன் குறித்த பேச்சை தவிர்த்தார். முன்னதாக, பழனிசாமி வாகனத்தை அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக இன்று தேனி மாவட்டம் கம்பம், போடி, தேனியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கம்பம் பிரச்சாரத்துக்காக தேனியில் இருந்து பழனிசாமி சென்று கொண்டிருந்தார். அப்போது அனுமந்தன்பட்டி அருகே அமமுகவினர் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது வாகனத்தை திடீரென மறித்தனர். அதிமுகவில் இருந்து விலகியவர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். போலீஸார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து வாகனங்கள் கிளம்பிச் சென்றன.
கம்பத்தில் பேசியது என்ன? - கம்பத்தில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, “கம்பம் நகரமே அதிரும் அளவுக்கு மக்கள் திரண்டு வந்துள்ளனர். வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்பதற்கு இதுவே சாட்சி. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்றத்துக்காக அதிமுக. காலத்தில் குடிமராமத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் திமுக இத்திட்டத்தை ரத்து செய்து விட்டது.
2017-ம் ஆண்டில் தமிழகம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது பயிர் சேதத்தைக் கணக்கிட்டு வறட்சி நிவாரணம் அளித்தோம். 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினோம். ஆனால் திமுக ஆட்சியில் இந்நிலை இல்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லாத மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது. 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக பெரியாறு அணை உள்ளது. நீர்மட்டத்தை உயர்த்த நீதிமன்றம் வரை சென்று போராடினோம். விவசாயிகளின் வயிற்றில் பால் வளர்த்தது அதிமுக அரசு.
கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் பெரியாறு அணை பிரசிச்னைக்க தீர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால், அணை பிரச்னையை தீர்க்க வாய்ப்பு இருந்தும் அதனை திமுக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஸ்டாலினுக்கு விவசாயமும் தெரியாது. விவசாயிகளின் கஷ்டமும் தெரியாது. மக்களுக்கு நன்மை செய்யும் அரசு தனக்கு கிடைக்கும் வாய்ப்பை முழுமையாகபயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், கேரள அரசுடன் பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை.
இன்றைக்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படும் நிலையும் உள்ளது. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. இனி போலீஸாரைக் காக்க ராணுவம்தான் வர வேண்டும் போலிருக்கிறது. தமிழகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுக்கு பயம் இல்லாமல் போய் விட்டது. ஆனால் அதிமுக காலத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்தது. சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் எல்லா துறையும் வளர்ச்சி பெறும்.
தமிழகம் தொழில் துறையிலும், வாழ்வாதார முறையிலும் சரிந்து கொண்டிருக்கிறது. கரோனா பரவிய காலத்தில் ரேஷன் கார்டுதாரருக்கு தலா ஆயிரம் ரூபாய், அரிசி, எண்ணெய் உள்ளிட்டவற்றை ஓராண்டு கொடுத்தோம். பல துறைகளிலும் சாதனை மேல் சாதனை படைத்து தேசிய அளவில் பல்வேறு விருதுகளை நாம் பெற்றோம்.
அதிமுக ஆட்சியை விட இன்றைக்கு விலைவாசி பலமடங்கு அதிகரித்து விட்டது. (தொடர்ந்து இதுகுறித்த பட்டியலை வாசித்தார்.) அதிமுக ஆட்சியில் விலை உயரும்போது கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு நிதி ஒதுக்கினோம். எந்தப் பொருளின் விலை உயர்கிறதோ அப்பொருளை வெளிமாநிலத்தில் குறைந்த விலைக்கு வாங்கி கூட்டுறவுத்துறை மூலம் விற்பனை செய்தோம். ஆனால், விலைவாசி உயர்ந்த நிலையில் திமுகவினர் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படுதே இல்லை.
ஸ்டாலின் தனது குடும்பத்தைப் பற்றித்தான் கவலைப்படுகிறார். கருணாநிதி முதல் இன்றைக்கு இன்பநிதி வரை குடும்ப ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை ஆள இவர்கள் என்ன ராஜ பரம்பரையா? இது ஜனநாயக நாடு. திமுகவில் கடைநிலை தொண்டர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் உயர்நிலைக்கு வர முடியுமா? திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது.
ஆனால், அதிமுகவில் சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரலாம். விசுவாசம், உழைப்பு இருந்தால் போதும். முதல்வர் பதவிக்கும் வரலாம். ஆனால், திமுகவில் இதை பற்றி பேச முடியுமா? திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பல திட்டங்கள் அதிமுக வெற்றி பெற்றதும் நடைமுறைப்படுத்தப்படும். வரும் தேர்தலில் வெற்றி பெறப்போகிறோம் என்று ஸ்டாலின் பல்வேறு கனவு கண்டு கொண்டிருக்கிறார். ஆனால் அது கானல் நீராகத்தான் முடியும்” என்று அவர் பேசினார்.
செங்கோட்டையன் குறித்த பேச்சை தவிர்த்த இபிஎஸ்: செங்கோட்டையன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இதற்காக பழனிசாமிக்கு கால அவகாசமும் அளிப்பதாக தெரிவித்திருந்தார். இது குறித்து தேனியில் தங்கியிருந்த பழனிசாமியிடம் கேள்வி கேட்க செய்தியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அதனைத் தவிர்த்துவிட்டு காரில் அவசரமாக கம்பம் பிரச்சாரத்துக்கு கிளம்பிச் சென்றார். கம்பம் பிரச்சாரத்திலும் செங்கோட்டையன் குறித்த பேச்சு இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அங்கும் செங்கோட்டையனைப் பற்றி அவர் எதுவும் பேசவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT