Published : 05 Sep 2025 09:27 AM
Last Updated : 05 Sep 2025 09:27 AM
ஈரோடு: கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதால் அவரது கட்சி அலுவலகத்தில் பரபரப்பு கூடியுள்ளது.
அண்மையில், கோபியில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவதாக அறிவித்திருந்தார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கோபியில் உள்ள கோபி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் அவர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அவரது பேச்சை ஒளிபரப்ப அலுவலகத்துக்கு வெளியே பெரிய திரை வைக்கப்பட்டுள்ளது. கட்சியில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அவரது தொகுதி மக்களும் கூட ஷேர் ஆட்டோக்கள் மூலம் நிகழ்விடத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
பிரச்சினையின் பின்னணி என்ன? அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அன்னூரில் நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததைக் கண்டித்து, முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் விழாவைப் புறக்கணித்தார். தொடர்ந்து, பழனிசாமியின் பெயரை தவிர்த்து செங்கோட்டையன் பேசியது, அவரது அதிருப்தியை வெளிப்படுத்தியது. எனினும், அவரை சமாதானப்படுத்த கட்சித் தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் கோபியில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “கோபியில் வரும் 5-ம் தேதி காலை செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேச உள்ளேன். அதுவரை பொறுமை காக்க வேண்டும்” என்றார்.
பரவிய வதந்தி: செங்கோட்டையனுக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்காததால், கடந்த 6 மாதங்களாக பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதில், செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைய உள்ளார் என்ற வதந்தியும் ஒன்றாகும். இந்நிலையில், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாக செங்கோட்டையன் அறிவித்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT