Published : 05 Sep 2025 07:22 AM
Last Updated : 05 Sep 2025 07:22 AM
புதுக்கோட்டை: இலுப்பூர் அருகேயுள்ள மாராயப்பட்டி கிராமத்தில், புதுக்கோட்டையை ஆட்சி செய்த சிவந்தெழுந்த பல்லவராயர் எனும் மன்னர், சிவன் கோயிலுக்கு நிலத்தை கொடையாக வழங்கியதை குறிக்கும் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் மாராயப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகா, அங்குள்ள கண்டனி குளத்து வயல்வெளியில் ஊன்றப்பட்டுள்ள கற்பலகை ஒன்றில் எழுத்துகள் இருப்பதாக அளித்த தகவலின்பேரில், பேராசிரியர் முத்தழகன், பாண்டிய நாட்டு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, தான கல்வெட்டு இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, இந்த கல்வெட்டு குறித்து முத்தழகன் கூறியது: மாராயப்பட்டி கண்டனி வயலின் நடுவே காலமுனி கோயிலின் எல்லையாக வணங்கப்பட்டு வரும் கல் தூணுக்கு எதிரே ஊன்றப்பட்டிருக்கும் 3 அடி உயரம், இரண்டேகால் அடி அகலம் கொண்ட கற்பலகையின் ஒருபுறத்தில், ஆனந்த வருடம் ஆவணி 6-ம் நாள் ஆரியூர் அழகிய சொக்கநாத சுவாமிக்கு சிவந்தெழுந்த பல்லவராயர், இந்த கண்டனி வயலில் உள்ள நிலங்களை சர்வ மானியமாக வழங்கிய செய்தி எழுதப்பட்டுள்ளது. மேலும், இந்த தானத்துக்கு தீங்கு நினைப்பவர்கள் சிவதுரோகிகளாக கருதப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சிவந்தெழுந்த பல்லவராயர், கி.பி. 17-ம் நூற்றாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளை ஆட்சி செய்த பல்லவராயர் மரபின் கடைசி அரசர் ஆவார். சிவபக்தரான இவர், இந்த நிலக் கொடை போலவே குடுமியான்மலை, திருக்கோகர்ணம் கோயில்களுக்கும் பல்வேறு தானங்களை வழங்கியுள்ளார்.
சேதுபதி அரசருடன் பிணக்கு: சிவந்தெழுந்த பல்லவராயர் உலா’ எனும் நூல் இவர் மீது பாடப்பெற்ற உலா நூலாகும். 96 வகை சிற்றிலக்கியங்கள் இவர் மீது பாடப்பெற்றன என்று இந்நூல் கூறுகிறது. ராமநாதபுரம் சேதுபதி அரசருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக இவர் கண்டதேவியில் கொல்லப்பட்டார். அதன்பிறகே, தொண்டைமான் அரசர்களுக்கு புதுக்கோட்டையின் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கல்வெட்டு குறிக்கும் அழகிய சொக்கநாத சுவாமி என்பது அருகில் உள்ள ஆரியூர் சிவன் கோயிலின் இறைவன் பெயராகும். இந்த கல்வெட்டில் கூறப்படும் கண்டனி வயலில் விளையும் நெல்லில் ஒரு குறிப்பிட்ட பங்கை கோயிலுக்கு இன்றளவும் இப்பகுதி விவசாயிகள் வழங்கி வருவதாக மாராயப்பட்டி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கல்வெட்டு பலகையின் மற்றொரு பக்கத்தில் சூரியன், சந்திரன் மற்றும் திரிசூலத்தின் கோட்டுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை சிவன் கோயிலுக்கு வழங்கப்படும் தானத்தைக் குறிக்கும். மேலும், இந்த கல்வெட்டு பலகைக்கு எதிரே ஊன்றப்பட்டுள்ள கல் தூணில் திரிசூலம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த தூண், கல்வெட்டில் தானமளிக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் நிலத்தின் எல்லையைக் குறிக்கும் சூலக்கல் ஆகும்.
கி.பி. 1674-ல்.. கண்டனி குளத்தின் கரையில் வழிபாட்டில் உள்ள காலமுனி கோயிலின் எல்லையாக இந்த சூலக்கல்லை உள்ளூர் மக்கள் வணங்கி வருகின்றனர். இந்த கல்வெட்டு கி.பி. 1674-ல் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், புதுக்கோட்டை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகளில் இதுவும் ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT