Published : 05 Sep 2025 06:40 AM
Last Updated : 05 Sep 2025 06:40 AM
மதுரை: தனது குடும்பத்தினரைப் பற்றி மட்டுமே யோசிக்கும் முதல்வருக்கு, ஏழை மக்கள் துயரைப் போக்கும் சிந்தனையே இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்ட பழனிசாமி, 4-வது நாளான நேற்று சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டியில் பொதுமக்களிடையே பேசியதாவது: தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. ஒரு குடும்பம் மட்டும்தான் பயனடைகிறது.
திமுக ஆட்சியால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. அவரது வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன பதவி கொடுக்கலாம், என்ன அதிகாரம் கொடுக்கலாம் என்பதில்தான் கவனம் செலுத்துகிறார். ஏழை மக்களின் கஷ்டங்களைப் போக்குவது குறித்து அவர் சிந்திப்பதில்லை.
அதிமுக கோரிக்கை வைத்ததால்தான் 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க, மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி வழங்கியது. தற்போது மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்துள்ளது. டிராக்டர், விவசாயக் கருவிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் பயனடைவர்.
அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. அதிமுக ஆட்சியில் சர்வதேச அளவிலான விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாற்றப்படும். மாடுபிடி வீரர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பணம் வாங்கிக் கொண்டு, வேண்டியவர்களுக்கு டோக்கன் கொடுக்கின்றனர். ஜல்லிக்கட்டிலும் ஊழல் செய்கின்றனர். அதிமுக ஆட்சியில் மக்கள் விரும்பும்படி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். மக்கள் விழிப்புடன் இருந்தால்தான் திமுக ஆட்சியை வீழ்த்த முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT