Published : 05 Sep 2025 05:59 AM
Last Updated : 05 Sep 2025 05:59 AM

தமிழகத்தில் நல்லிணக்கம், சகோதரத்துவம் போற்றுவோம்: முதல்வர், தலைவர்கள் மீலாது நபி வாழ்த்து

சென்னை: நபிகள் நாயகம் பிறந்தநாளான மீலாது நபி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம் பேசாமை, பெண்களை மரியாதையோடு நடத்துதல் என உலகத்துக்கு என்றென்றும் தேவையான நற்கருத்துகளை போதித்தவர் நபி. அவரது போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் திமுக அரசு ஒவ்வொரு முறை ஆட்சியமைக்கும்போதும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இஸ்லாமியர்களுக்கும், இலங்கைத் தமிழருக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆட்சிக்கு வந்ததுமே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, தமிழகத்தில் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படாது என்றும் அறிவித்தோம். இப்படி, உங்களில் ஒருவராகவே இருந்து செயல்படும் அரசின் சார்பில் மீலாதுன் நபி வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் அமைதி தழைக்கவும், சமாதானம் ஓங்கவும், சகோதரத்துவம் வளரவும் உழைப்போம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகத்தின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: ‘பூமியில் உள்ளவர்க ளிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள், வானத்தில் உள்ளவர் உங்கள் மீது கருணை காட்டுவார்’ என்று போதித்த நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில், கோபத்தை அடக்கி எல்லோரிடமும் கருணை காட்ட உறுதியேற்போம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: நாம் அனைவரும் சகோதரர்கள், ஏற்றத்தாழ்வு அற்றவர்கள் என்று பெருவெளி யில் முழங்கிய நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில், தமிழகத்தில் மதநல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வோம். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

மேலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி, ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், வி.கே.சசிகலா, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரி வித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x