Published : 04 Sep 2025 05:37 PM
Last Updated : 04 Sep 2025 05:37 PM
சென்னை: காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தினை வரும் நவம்பர் 30-க்குள் தமிழகம் முழுவதும் அமல்படுத்த அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.
வனம், வன விலங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இங்கு, காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் மது பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் 15 மாவட்டங்களில் முழுமையாக அமலில் உள்ளது. 7 மாவட்டங்களில் பாதி அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வேலூர், சேலம், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள 850 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தின் கீழ் 113 கோடியே 81 லட்சம் பாட்டில் விற்பனை செய்யபட்டது. அதில் 71 கோடியே 39 லட்சம் பாட்டில்கள் டாஸ்மாக் மூலமாகவும் 40 கோடியே 62 லட்சம் பாட்டில்கள் பார்கள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளன.
மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் 98.09 சதவீதம் பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டது. மேலும் டாஸ்மாக் மது விற்பனை அனைத்தும் கணினி மயமாக்கபட்டுள்ளது. திரும்ப பெறும் மது பாட்டில்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்ததன் மூலமாக 17 கோடியே 86 லட்சம் ரூபாய் அரசிடம் இருக்கிறது. இந்த தொகையை தனி வங்கிக் கணக்கில் பராமரித்து வரப்படுகிறது.
மது பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக மது உற்பத்தி நிறுவனங்களுடன் கடந்த மாதம் ஆலோசனை செய்யப்பட்டது. அதில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. மற்ற நிறுவனங்கள் பங்கேற்கவில்லை. பாட்டில்களை திரும்பப் பெறுவதை சில நிறுவனங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. சில நிறுவனங்கள் கால அவகாசம் கோரியுள்ளன.
புதிய பார் ஏலம் விடும் போது காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மது பாட்டில்களும் கியூ ஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கையிலும் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது அதில் நிர்வாக ரீதியாக ஏற்படும் சில மாற்றங்கள் செய்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. வேண்டும் என்று இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் கால தாமதம் செய்யவில்லை’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை படித்துப் பார்த்த நீதிபதிகள், காலி மது பாட்டில் பெறும் திட்டத்தை செயல்படுத்த மேலும் கால அவகாசம் அளிக்க முடியாது எனத் தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள், தமிழகம் முழுவதும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தினை அனைத்து மாவட்டங்களில் வரும் நவம்பர் 30-க்குள் நடைமுறை படுத்த வேண்டும் என கெடு விதித்து உத்தரவிட்டனர்.
இதனை செயல்படுத்துவது தொடர்பாக அக்டோபர் 10-ம் தேதி தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT