Published : 04 Sep 2025 12:33 PM
Last Updated : 04 Sep 2025 12:33 PM
சென்னை: “இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார் என்று நான் சொன்னதாக மக்களிடையே பரப்பிய அனைத்து ஊடகங்களுக்கும் நான் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “நான் சொல்லாத விஷயங்களை எல்லாம் நான் சொன்னதாக பத்திரிகையாளர்கள் போடுகிறார்கள். அது கண்டனத்துக்குரியது. அது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்து விட்டது.
நாங்கள் எதை சொல்கிறோமோ அதை மட்டும் பிரசுரம் செய்யுங்கள். அண்ணன் எடப்பாடியை பற்றி நான் பேசியதாக ஒரு தகவல் செய்திகளில் பரவுகிறது. எங்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் கலந்துரையாடினோம். அதில் நிர்வாகிகளின் கேள்விக்கு நான் பதில் கூறினேன். உடனே இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார் என்று நான் சொன்னதாக மக்களிடையே பரப்பிய அனைத்து ஊடகங்களுக்கும் நான் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
நான் சொல்லாத விஷயத்தை நான் சொன்னதுபோல நீங்கள் சொல்லக் கூடாது. அப்படியான வார்த்தை என் வாயிலிருந்து வரவே வராது. நான் அப்படிப் பேசியதே இல்லை. எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் நாங்கள் எது வேண்டுமானாலும் ஆலோசனை செய்வோம். அதையெல்லாம் ஊடகங்களிடம் சொல்ல முடியுமா? ஊடகங்களிடம் நான் என்ன பேட்டி கொடுக்கிறேனோ அதைத்தான் நீங்கள் செய்தியாக போட வேண்டும். ஆனால் உங்கள் சுயலாபத்துக்காக மாற்றி மாற்றி திரித்து செய்தி வெளியிட்டால், மேல்மருவத்தூர் அம்மன் முன்னால் கேட்டுக் கொள்கிறேன், தயவுசெய்து இனி என்னிடம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வராதீர்கள்” இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT