Published : 04 Sep 2025 06:12 AM
Last Updated : 04 Sep 2025 06:12 AM
சென்னை: ‘அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழக முதல்வர் நாட்டுக்கு நல்லதுதானே செய்துள்ளார்’ என்று பாஜகவினரின் விமர்சனத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: “தெருநாய் பிரச்சினை குறித்தும் தெருநாய்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பிராணிகள் நல ஆர்வலர்கள் கூறுவது குறித்தும் கேட்கிறீர்கள். இதற்கான தீர்வு மிகவும் சுலபம்.
விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் மற்றும் சமூக சுகாதாரம் என்னவென்று அறிந்தவர்கள் கழுதைகளை எங்கும் காணோம் என்று கவலைப்படுகிறார்களா? கழுதைகள் நமக்காக எவ்வளவோ பொதி சுமந்திருக்கின்றன? இப்போது கழுதைகளைக் காண முடிகிறதா? கழுதைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று யாராவது பேசுகிறார்களா? எல்லா உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு காப்பாற்ற வேண்டும். இதுதான் எனது கருத்து” என்றார்.
தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து பாஜகவினர் விமர்சனம் செய்கின்றார்களே என்று கேட்டதற்கு, “என்னைப் பொருத்தவரை, ஒருவர் நல்லது செய்யும்போது, அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்பதை நான் பார்ப்பது கிடையாது. நாட்டுக்கு நல்லது நடக்கிறது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து தமிழக முதல்வர் நாட்டுக்கு நல்லதுதான் செய்துள்ளார் என்றார்.
பிஹாரில் நடந்த வாக்காளர் அதிகார யாத்திரையின்போது பிரதமரின் தாயாரை அவமரியாதையாக பேசப்பட்டதாகக்கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, “யாரையும் அவமானப்படுத்துவது போல் யாரும் பேச வேண்டிய அவசியமில்லை. ஓட்டு காணாமல் போவது, வாக்காளர் பட்டியலில் பெயர் காணாமல் போவது குறித்து நானே நீண்ட காலமாக சொல்லி வருகிறேன்.
வாக்காளர் பட்டியலில் எனது பெயர்கூட காணாமல் போயிருக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் காணாமல் போயிருந்தால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் சென்று முறையிட்டு பட்டியலில் திருத்தம் செய்துகொள்ள வேண்டும். இது ஒரு சிறிய விஷயம் இதைவிட பெரிய குற்றங்கள் நடந்ததாக எங்களுக்குச் சந்தேகம் வந்தபோது நாங்கள் கூட கடிதம் கொண்டு கொடுத் திருக்கிறோம். இவையெல்லாம் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அதனுடைய உச்சகட்டம்தான் பிஹாரில் நடக்கும் சம்பவங்கள்.” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT