Published : 04 Sep 2025 06:30 AM
Last Updated : 04 Sep 2025 06:30 AM

மேயர்கள் மாற்றத்துக்கு ஊழல் பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட மோதலே காரணம்: பழனிசாமி குற்றச்சாட்டு

கோப்புப் படம்

மதுரை: ஊழல் பணத்தை பங்கிடுவதில் கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட மோதலால் கோவை, காஞ்சி, நெல்லை மாவட்ட மேயர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப்பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மதுரையில் 3-வது நாளான நேற்று மேற்கு தொகுதியில் உள்ள பழங்காநத் ததில் பேசியதாவது:மதுரை மாவட்டம் அதிமுக கோட்டை. கடந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து சில தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.

அடுத்த ஆண்டு தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. போதைப் பொருள் நடமாட்டத்தால் மிக மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. தமிழகத்தில் ஊழல் இல்லாத துறைகளே இல்லை. மதுரை மாநகராட்சி சொத்துவரியில் ரூ.200 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது. இதற்கு காரணமான மேயரை கைது செய்யாமல் அவரது கணவரை கைது செய்துள்ளனர்.ஊழல்வாதிகளைக் காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த ஊழல் குறித்து விசாரிக்கப்படும்.

வரி வருவாயை மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அதைச் செய்யாமல் வரி வருவாயை திமுகவினரே பங்கிட்டுக் கொள்கின்றனர். இந்தச் சூழலில் மதுரை மாநகராட்சி ரூ.260 கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளது. இந்தக் கடனை மக்கள்தான் திரும்பச் செலுத்த வேண்டும். திமுக நடத்துவது ஊழல் அரசு என்பதற்கு மதுரை மாநகராட்சி ஊழல் சாட்சியாக உள்ளது.

பணத்தைப் பங்கு போடுவதில் திமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் இருப்பதால் கோவை, காஞ்சிபுரம், நெல்லை மாநகராட்சி மேயர்களை மாற்றியுள்ளனர். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் திமுக அரசுக்கு கமிஷன் செல்கிறது. திமுக ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. ஸ்டாலின் குடும்பம் மட்டும் செல்வச் செழிப்புடன் உள்ளது.

தொழில் முதலீட்டை ஈர்க்க முதல்வர் வெளிநாடு சென்றுள்ளதாகக் கூறுகின்றனர். அதற்காக அவர் வெளிநாடு செல்லவில்லை. ஊழல் பணத்தை தொழிலில் முதலீடு செய்ய சென்றுள்ளார். அதிமுக ஆட்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

திமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 10 சதவீதம் கூட பயன் பாட்டுக்கு வரவில்லை. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்துக்கு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் கே.ராஜூ தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைப்புச் செயலாளர் ராஜன்செல்லப்பா, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x