Published : 04 Sep 2025 06:20 AM
Last Updated : 04 Sep 2025 06:20 AM
சென்னை: குடும்ப நண்பரின் கிட்னியை பெற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ள அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த வி.பெரியசாமி என்பவர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது குடும்ப நண்பரான ஈரோட்டை சேர்ந்த சி.கணேசன் என்பவர், தனது கிட்னியை தானம் அளிக்க முன்வந்துள்ளார்.
இதற்காக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரக் குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையில் கணேசனும், பெரியசாமியும் குடும்ப நண்பர்கள் என்பதை நிரூபிக்க எந்த ஆவண, ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: குடும்ப நட்பு அடிப்படையில், அவரது நண்பர் கிட்னி தானம் அளிக்க முன்வந்துள்ளார். நட்பு என்பது உறவு ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் புனிதமானது. அதை ஆவணப்படுத்த முடியாது. எனவே, மனுதாரரின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அங்கீகாரக் குழு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இருதரப்பும் குடும்பத்துடன் அங்கீகாரக் குழு முன்னிலையில் இன்று ஆஜராக வேண்டும். மனுதாரரின் விண்ணப்பத்தை அதிகாரிகள் 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்து, முடிவு எடுக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள்தான் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என சட்டத்தில் சொல்லவில்லை.
விலை மதிப்பற்ற உயிரைக் காக்கும் நோக்கில், அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையிலேயே உடல் உறுப்பு தானங்கள் நிகழ வேண்டும் என்பதே சட்டத்தின் அடிப்படை நோக்கம். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT