Published : 04 Sep 2025 05:42 AM
Last Updated : 04 Sep 2025 05:42 AM
சென்னை: டெல்லியில் பாஜக உயர்மட்ட குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தேர்தல் நெருங்குவதால் உட்கட்சி பூசல்களை உடனடியாக களைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல், கூட்டணி ஒருங்கிணைப்பு, 2026 சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆராய டெல்லியில் உயர்மட்டக் குழுக் கூட்டம் உள்துறை அமைச்சர் அமத் ஷா வீட்டில் நேற்று நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எல்.முருகன், வானதி சீனிவாசன், சரஸ்வதி, நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை.
அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டணியில் அதிமுக, பாஜக மட்டுமே இடம்பெற்றிருக்கும் நிலையில், மேலும் பல கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியாக அமைக்கும் வகையில், கூட்டணி வியூகத்தை மாற்றி அமைப்பதற்கான ஆலோசனைகளை அமித் ஷாவும், ஜே.பி.நாட்டாவும் வழங்கி உள்ளனர்.
மேலும், 234 தொகுதிகளுக்கும் பாஜக பொறுப்பாளர்களை நியமிப்பது, தமிழகத்தில் வெற்றி பெறுவதற்கு சாதகமான சட்டப்பேரவைத் தொகுதிகள், அதிமுகவுடனான தொகுதி பங்கீடு முரண்பாடுகள், வாக்கு வங்கியை அதிகரிப்பது, குறிப்பாக, மேற்கு மண்டலத்தில் கவுண்டர் சமுதாய வாக்குகளை முழுமையாக பெறுவது, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
மேலும், மாநில கட்சி நிர்வாகிகளுக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களை உடனடியாக களைய வேண்டும் என கூட்டத்தில் அமித் ஷா அறிவுறுத்தியதாக தெரிகிறது. குறிப்பாக, தமிழக பாஜகவில் அணி அணியாக பிரிந்து நிற்காமல், அனைவரும் ஒற்றுமையாக இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழகம் முழுவதும் பேனர்கள் வைப்பதுடன், கூட்டங்கள் நடத்தி அவரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT