Published : 04 Sep 2025 05:13 AM
Last Updated : 04 Sep 2025 05:13 AM
சென்னை: எந்த நாட்டில் இருந்தாலும் என் மனம் தமிழகத்தை சுற்றித்தான் இருக்கும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்குடன் திமுக அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதை மேலும் விரைவுபடுத்த முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆக. 30-ல் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கினேன்.
அன்று இரவு ஜெர்மனியில் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். மேலும், அப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் குடும்பம், குடும்பமாக வந்து வரவேற்பு அளித்தனர். மறுநாள் நடைபயிற்சியின் போது சென்னையில் பெய்த மழை குறித்த தகவலைக் கேட்டறிந்தேன். சென்னையில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை என்பதை துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். எந்த நாட்டில், எந்த நகரில் இருந்தாலும் என் மனம் தமிழகத்தை சுற்றித்தான் இருக்கிறது.
ஆகஸ்ட் 31 மாலையில் தமிழ்ச் சொந்தங்களை சந்தித்தேன். ஜெர்மனி தமிழர்கள் மட்டுமல்லாது, ஸ்வீடன், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் 16 மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களும் அந்த சந்திப்புக்கு வந்திருந்தனர். ஜெர்மனி பயணம் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் ரூ.7,020 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
செப். 2 காலை என்ஆர்டபிள்யூ மாநிலத்தின் அமைச்சரும், அதிபருமான ஹென்ரிக் வுஸ்ட்டை சந்தித்தேன். தமிழகத்துடன் எந்தெந்த வகையில் இணைந்து செயல்படுவது என்பது குறித்து ஆலோசித்தோம். ஜெர்மனி சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நிறைவேறிய மகிழ்வுடன், லண்டனுக்கு விமானத்தில் புறப்பட்டேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT