Published : 03 Sep 2025 02:03 PM
Last Updated : 03 Sep 2025 02:03 PM
சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை சூளைமேடு பகுதியில், மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மூடப்படாமல் இருந்த மழை நீர் பணி பள்ளத்தை பல மாதங்களாக முடூவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அக்கறையற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தினால் இந்த உயிர் பலி நடந்திருந்திருக்கிறது
உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், சுமார் அரை மணி நேரம் அவர் உயிருக்குப் போராடியதாக வரும் தகவல்கள் பதை பதைக்க வைக்கின்றன. மழைநீர் வடிகால் பணிகள், 95%, 97% முடிவடைந்து விட்டன என்று நான்கரை ஆண்டுகளாக சதவீதக் கணக்கு போட்ட பொம்மை முதல்வர் அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் இந்த உயிரிழப்புக்கு சொல்லப்போகும் பதில் என்ன?
ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதெல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று ஸ்டாலின் சொல்வாரா? மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை. மழைநீரும் வடிந்த பாடில்லை. அப்பாவி உயிர்கள் பறி போவதைத் தடுக்க வக்கில்லை. இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்?
தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன? - சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. சூளைமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் 8, வார்டு 106-க்கு உட்பட்ட வீரபாண்டி நகர் முதல் தெருவில் மழைநீர் வடிகால் பள்ளம் சரியாக மூடப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக வந்த தீபா (42) என்ற பெண் எதிர்பாராத விதமாக அதில் தவறி விழுந்து இறந்துள்ளார். இரவு நேரம் என்பதால் அவர் பள்ளத்தில் விழுந்ததை யாரும் பார்க்கவில்லை.
நேற்று காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சூளைமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து, தீயணைப்புப் படை வீரர்கள் உதவியுடன் கயிறு கட்டி சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT