Published : 03 Sep 2025 05:44 AM
Last Updated : 03 Sep 2025 05:44 AM
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக பிரபல மருந்து நிறுவன உரிமையாளர் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மருந்து நிறுவன உரிமையாளர், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட மருந்து நிறுவன உரிமையாளர் தொடர்புடைய சுமார் 10 இடங்களில் அடுத்தடுத்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், புரசைவாக்கத்தில் உள்ள அவரின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு 2 வாகனங்களில் விரைந்த 8 அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை மேற் கொண்டனர். இதேபோல், அவருக்குச் சொந்தமாக அம்பத்தூரில் உள்ள மருந்து நிறுவன தொழிற்சாலையிலும் சோதனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து கே.கே.நகர் விஜயராகவபுரத்தில், காலமான ஆடிட்டர் ஒருவருக்கு சொந்தமான வீடு (வீட்டில் ஆள் இல்லாததால் போட்டோ மட்டும் எடுத்துச் சென்றனர்), தி.நகர் மேட்லி, 2-வது தெருவில் உள்ள வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. சில இடங்களில் வீடு மற்றும் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் சோதனை நடத்தாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சட்டவிரோத பணப்பரி மாற்ற குற்றச்சாட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நிறைவடைந்த பின்னரே அது தொடர்பான முழு விபரங்களை வெளியிட முடியும்” என்றனர். இதற்கிடையே, அமலாக்கத்துறை சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT