Published : 03 Sep 2025 06:17 AM
Last Updated : 03 Sep 2025 06:17 AM
ராமேசுவரம் / கடலூர்: கச்சத்தீவு இலங்கைக்குரியது, அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் கூறியுள்ளதற்கு, அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த பின்னர், கடந்த 51 ஆண்டுகளில் முதன்முறையாக இலங்கை அதிபர் கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மண்டை தீவில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, பின்னர் மண்டைத்தீவு, நயினாத் தீவு மற்றும் கச்சத்தீவுகளுக்குச் சென்று பார்வையிட்டார்.
இது தொடர்பாக இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அதிபர் அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் உள்ள கச்சத்தீவுக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே ஆகியோர் உடனிருந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க “கச்சத்தீவு இலங்கைக்குரியது, அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” - என்று தெரிவித்திருந்தார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பான இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தவாக தலைவர் த.வேல்முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
இரா.முத்தரசன்: இலங்கை அதிபரின் பேச்சு இருநாட்டு உறவுக்கும் எதிரானது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரும், கடல் கொள்ளையர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இலங்கை அதிபர் ‘இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடித்து சிக்கினால், அவர்களை எளிதாக விட மாட்டோம். பிடிபடும் படகுகளை திருப்பித் தர மாட்டோம். அது இலங்கைக்கே சொந்தமாகும்’ என்று கூறியிருப்பதும் அதிகார ஆணவத்தின் உச்சமாகும்.
தி.வேல்முருகன்: கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கை அதிபரின் திமிர்ப்பேச்சு தமிழக மீனவர்களின் உரிமைக்கும், மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நேரடியாகச் சவால்விடும் அகந்தை மிகுந்தப் பேச்சாகும். கச்சத்தீவு தமிழர்களின் உரிமை நிலம்.
இலங்கை அதிபரின் பேச்சுக்கு மத்திய அரசும், அமைச்சர்களும் மவுனம் சாதிப்பது வரலாற்றின் பெரும் துரோகம். எனவே, கச்சத் தீவை மீட்டெடுக்க சட்ட, அரசியல் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT