Published : 02 Sep 2025 09:33 PM
Last Updated : 02 Sep 2025 09:33 PM

“எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு 10% கமிஷன்...” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மதுரை: “எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு 10 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழலைத் தோண்டி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை ஒத்தக்கடையில் பேசியது: “தமிழக முதல்வர் ஸ்டாலின் கனவில் உள்ளார். அடுத்த ஆண்டு தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பகல் கனவு காண்கிறார். ஸ்டாலின் கூட்டணியை நம்பிக் கொண்டிருக்கிறார். நாங்கள் மக்களை நம்பியுள்ளோம்.

மக்கள்தான் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். மக்கள் நினைத்தால் தான் ஆட்சிக்கு வர முடியும். அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். அடுத்த ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் எத்தனை கூட்டணி அமைத்தாலும் வெற்றி பெற முடியாது.

ஸ்டாலின் மீதும், திமுக அரசு மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழந்துவிட்டனர். திமுக இப்போது வீடுவீடாக சென்று கெஞ்சி கூத்தாடி கட்சி உறுப்பினர்களை சேர்த்து வருகிறது. திமுக படுபாதாளத்தில் சென்றுவிட்டது. திமுக தொண்டர்களின் செல்வாக்கை இழந்து நிற்கிறது. தொண்டர்கள் இருந்திருந்தால் ஏன் வீடு வீடாக போய் கெஞ்சி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். ஒரு கட்சிக்கு தொண்டர்கள் பலம்தான் முக்கியம். அந்த வகையில் அதிமுகவுக்கு தொண்டர்கள் பலமும், நிர்வாகிகள் பலமும் உள்ளது. இதனால் மக்கள் அதிமுகவை விரும்புகிறார்கள்.

தமிழகத்தில் எந்தக் கட்சியும் திமுகவை போல் உறுப்பினர் சேர்க்கை நடத்தியதில்லை. மக்கள் விரும்பினால் விரும்பும் கட்சியில் உறுப்பினர்களாக சேர்வார்கள். இதுதான் தமிழகத்தில் இதுவரை இருந்த நடைமுறை. திமுகவில் உறுப்பினராக சேராவிட்டால் உதவி தொகையை நிறுத்துவதாக மிரட்டுகின்றனர். திமுகவின் மிரட்டல்களுக்கு மக்கள் பயப்படக்கூடாது. மக்களுக்கு அதிமுக பக்கபலமாக இருக்கும்.

மகளிர் உரிமைத் தொகையை திமுகவினர் அவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்தா தருகிறார்கள்? கடன் வாங்கித் தருகிறார்கள். வருமானத்தை பெருக்கி தரவில்லை. இந்தக் கடனை மக்கள் தான் கட்ட வேண்டும். வருவாயை பெருக்காமல், கடன் வாங்கி உரிமை தொகை வழங்குவது எந்த வகையில் நியாயம் ? மக்களுக்கு சுமையாகத்தான் இருக்கும்.

அதிமுக தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் ஆட்சிக்கு வந்து 28 மாதம் கழித்து மகளிர் உரிமைத் தொகை தந்தனர். இப்போது விதிகளை தளர்த்தி மேலும் 30 லட்சம் பேருக்கு உதவி தொகை தருவதாக கூறியுள்ளனர். இது பெண்களின் கஷ்டத்தை பார்த்து அறிவிக்கவில்லை. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் வாக்குகளை பெறவே இந்த நாடகம். ஒரு அரசு மக்களின் கஷ்டத்தை பார்த்து உதவிகளை வழங்க வேண்டும். தேர்தலை மனதில் கொண்டு எதையும் செய்யக் கூடாது. கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வழங்கி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்ததும் அந்தர்பல்டி அடித்து அளித்த வாக்குறுதிகளை மறந்து ஆட்சி செய்கின்றனர்.

இந்த தொகுதியின் அமைச்சர் எப்படிப்பட்டவர் என்பது தெரியும். பத்திரப் பதிவுத் துறையில் கொள்ளையோ கொள்ளை நடைபெறுவதாக மக்கள் பேசுகிறார்கள். செந்தில் பாலாஜி பத்து ரூபாய் அமைச்சர். இவர் பத்து பிரசென்ட் அமைச்சர். எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு பத்து சதவீத கமிஷன் கொடுக்க வேண்டும். கமிஷன் கொடுக்காவிட்டால் சொத்தை பதிவு செய்ய முடியாது. கஷ்டத்தில் சொத்துகளை விற்பவர்களை கமிஷன் என்ற பெயரில் மேலும் கஷ்டப்படுத்துகின்றனர். அந்தளவு அவல ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் 582 பத்திரப் பதிவு அலுவலங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களில் ஒரு சார் பதிவாளரை ஓர் ஆண்டுக்கு மேல் பணிபுரியவிடுவதில்லை. இடமாறுதல் செய்து அந்த வகையில் பெரிய தொகை வசூலிக்கின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழல் தோண்டி எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்து வரும் அதிமுக அரசு கடந்த அதிமுக அரசு போல் இருக்கும் என நினைக்க வேண்டாம். 4 ஆண்டு 2 மாதம் ஆட்சியில் இருந்தேன். இப்படி செய்ய மனமில்லாமல் இருந்தோம். இந்த திமுக அரசு மிக மிக மோசமான, மிக மிக கேவலமான அரசாக உள்ளது. எல்லா துறையிலும் லஞ்சம் தாண்டவமாடுகிறது. இதை மக்கள் துணையுடன் வெல்வோம். இதற்கெல்லாம் அமைச்சர்கள் அடுத்தாண்டு பதில் செல்லியே ஆக வேண்டும்.

அதிமுக எழுச்சி பயணத்துக்கு அமைச்சர் சொந்தரவு கொடுத்து வருகிறார். அதிமுக ஆட்சியில் தான் அதிக போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு அனுமதி வழங்கினோம். போராட்டங்களை சந்திக்கும் தில், திராணி, தெம்பு வேண்டும். இந்த அரசு பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் எதற்கும் அனுமதி தருவதில்லை. இந்த ஆட்சி தொடர வேண்டுமா? நான் எதற்கு அச்சப்பட மாட்டேன். பத்து முறை தேர்தலில் நின்றுள்ளேன். என்னிடம் உங்கள் பாச்சா பலிக்காது.

ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார். 3 புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார். அதில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள தொழிற்சாலைகள் அதிமுக ஆட்சியின் போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் ஏற்கெனவே தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. அந்த தொழிற்சாலைகளை விரிவுபடுத்த ஜெர்மனியில் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதற்கு ஏன் ஜெர்மனிக்கு போக வேண்டும். இங்கு வைத்தே ஒப்பந்தம் போட்டிருக்கலாமே. ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் புதிதாக போட்டுள்ளனர். ஸ்டாலின் சொந்த வேலைக்காக ஜெர்மனி சென்றுள்ளார். இதில் ஏதோ தில்லு முல்லு உள்ளது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிமுக, பாஜக கூட்டணி பற்றி ஸ்டாலினும், திமுக கூட்டணி கட்சியினரும் பேசி வருகின்றனர். அதிமுகவை பாஜகவின் அடிமை என்கிறார்கள். நாங்கள் எப்போதும் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது அதிமுகவின் நோக்கம். ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என பாஜக கருதுகிறது. இந்த ஒத்தக் கருத்து அடிப்படையில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளது. இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்?

அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்றெல்லாம் பேசுகிறார்கள். அதிமுகவை எந்தக் கட்சியாலும் விழுங்க முடியாது. ஸ்டாலின் தான் கூட்டணி கட்சியை விழுங்கிக் கொண்டிருக்கிறார். திமுக கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும். உஷாராக இருந்தால் தப்புவீர்கள். இல்லாவிட்டால் உங்களை ஸ்டாலின் விழுங்கிவிடுவார்.

தமிழகத்தில் 1999 நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மத்திய அமைச்சரவையிலும் திமுக இடம்பெற்றது. சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. நீங்க கூட்டணி வைத்தால் பாஜக நல்லக் கட்சி. அதிமுக கூட்டணி அமைத்தால் பாஜகவுக்கு அடிமை எனக் கூறுவதா? இது எந்த வகையில் நியாயம்?

கூட்டணி என்பது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படுவது. தேர்தல் நேரத்திலும் எல்லா கட்சிகளும் கூட்டணி அமைப்பது தான். அந்த அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில் பாஜகவுடன் வெற்றிக் கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணி வேறு. கொள்கை வேறு. கொள்கை நிலையானது. அதை யாராலும் மாற்ற முடியாது. எதிரிகளை வீழ்த்த கூட்டணி அமைத்துள்ளோம். ஒத்த கருத்து அடிப்படையில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி, ஆட்சி அமைப்பது உறுதி.

தமிழகத்தின் அனைத்து வரிகளும் உயர்ந்துள்ளது. திமுக ஆட்சி இருக்கும் வரை யாரும் வீடு கட்ட முடியாத அளவுக்கு கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்தும் திறனற்றவர்களாக ஸ்டாலினும், அமைச்சர்களும் உள்ளனர்.

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாக சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இவர்கள் கூறியதை நம்பி நீட் தேர்வுக்கு தயாராகாமல் இருந்து 25 பேர் உயிரிழந்தனர். நீதிமன்ற தீர்ப்பால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. இருப்பினும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுப்பதாக அதிமுக சார்பில் கூறப்பட்டது. இப்போது நீட் தேர்வில் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது ஸ்டாலின் கூறுகிறார். எங்கள் மீது பழிபோட்டு மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்தது” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

- கி.மகாராஜன், என்.சன்னாசி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x