Published : 02 Sep 2025 09:03 PM
Last Updated : 02 Sep 2025 09:03 PM

‘டெட்’ விவகாரம்: 1.5 லட்சம் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய கட்சிகள் வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தமிழகத்தில் 1.5 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிசெய்ய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பாமக தலைவர் அன்புமணி, “கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் 2011-2012 ஆண்டுக்கு பின் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும்தான் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிர்யர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப் படுத்தப் படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றிபெற வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித் தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு சட்டப்படி சரியாக இருந்தாலும் லட்சக்கணக்கான ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடியதாகும். இந்த தீர்ப்பின்படி தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவர். அதேபோல், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 30,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவர். எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், “உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவால் தமிழகத்தில் 1.5 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பணியில் தொடர முடியும் என்பது அதிர்ச்சியளிக்கிறது. பணி ஓய்வு பெறுவதற்கு ஐந்து ஆண்டுகள் இருப்பவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டிருப்பது போல், டெட் தேர்வில் பங்கேற்காத ஆசிரியர்களின் அனைவரது பணி பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், “உச்ச நீதிமன்ற தீர்ப்பு அனைத்து ஆசிரியர்களையும் நிலைகுலைய செய்துள்ளது. 20, 25 ஆண்டுகளுக்கு முன்பே ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் கூட தற்போது தங்கள் பணியைத் தொடர தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறுவது இயற்கை நீதிக்கு மாறானது.

இந்த தீர்ப்பால் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உடனடியாக அடுத்தக்கட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதனிடையே, “தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் கிடைத்தவுடன், அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, பின்னர் மேல்முறையீடு செய்யப்படும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்களும் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், எக்காரணத்தைக் கொண்டும் ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது” என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x