Last Updated : 02 Sep, 2025 08:16 PM

 

Published : 02 Sep 2025 08:16 PM
Last Updated : 02 Sep 2025 08:16 PM

‘குஜராத் நிறுவனங்களுக்கு ஆதாயமாக...’ - அமெரிக்க வரி விவகாரத்தில் மோடி மீது மு.க.ஸ்டாலின் விமர்சனம்

திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டம்.

சென்னை: “குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க அரசின் 50 சதவீத வரிவிதிப்பால் பாதிப்புக்குள்ளாகி உள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களை கண்டுகொள்ளாமல் விட்டதாக மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி!’ என்று குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடி அவர்களே... தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் விதித்துள்ள அமெரிக்க வரிவிதிப்பு காரணமாக, தமிழக இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் டாலர் சிட்டி திருப்பூர் தவிக்கிறது.

குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?

நான் ஏற்கெனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவன செய்யுங்கள். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு கண்டு, விஸ்வகுரு எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளைப் பதிவுசெய்த அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் நன்றி!” என்று கூறியுள்ளார். இந்தப் பதிவை பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் டேக் செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, திருப்பூர் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, “இந்தியா ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்க விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை நொறுக்கும் செயலாகும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஆர்டர் கிடைக்காத நிலையில், ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.

திருப்பூர், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பின்னலாடைத் தொழிலும், வேளாண்மை, கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு அனுப்பிவைத்த தொழில் துறையின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்றார். விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது, “அதானி மற்றும் அம்பானிக்காகவே பொருளாதார கொள்கைகளை தீர்மானிக்கிறார் பிரதமர் மோடி. உலக நாடுகளுக்கு மோடி பயணம் செய்வதே, இவா்கள் இருவருக்காகவும்தான்” என்றார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசும்போது, “மன்மோகன் சிங் ஆட்சியில் கச்சா எண்ணெய் 108 டாலர் என்ற விலையிலும், பெட்ரோல் விலை குறைவாக இருந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளபோதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மோடி, அமித் ஷா ஆகியோர் இந்தியாவை விற்கிறார்கள். அம்பானி, அதானி என்ற 2 பேர் அதை வாங்குகிறார்கள். மோடி தேசபக்தி உள்ளவராக இருந்தால், வரிக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். அதேபோல, சிறப்பு சலுகைகள் அடங்கிய திட்டத்தை கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் மோடியை வரலாறு மன்னிக்காது” என்றார்.

திருப்பூர் ரயில் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, எம்.பி.க்கள் கே.சுப்பராயன், சு.வெங்கடேசன், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x