Published : 02 Sep 2025 07:32 PM
Last Updated : 02 Sep 2025 07:32 PM
திருப்பூர்: “மோடி தேசபக்தி உள்ளவராக இருந்தால் மன்மோகன் சிங் சொன்னது போல தனித்தனி பொருட்களுக்கு வரி என மாற்றி புதுக் கொள்கையை வரையறுக்க வேண்டும். இதுபோன்ற மாற்றுத் திட்டங்களை கொண்டு வரும் வரை மோடியை வரலாறு மன்னிக்காது” என்று ஆ.ராசா எம்.பி கூறியுள்ளார்.
அமெரிக்க அரசின் 50 சதவீத வரிவிதிப்பால் கடும் பாதிப்புள்ளாகி உள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களை கண்டுகொள்ளாமல் கைவிட்ட மத்திய பாஜக அரசை கண்டித்தும், தொழில் துறையினருக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் பெரியார் அண்ணா சிலைகள் முன்பு இன்று (செப்.2) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் வரவேற்றார்.
இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்து பேசும்போது, ”இந்தியாவின் மீது அமெரிக்க விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு, இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை நொறுக்கும் செயலாகும். இங்குள்ள நிறுவனங்களுக்கு ஆர்டர் கிடைக்காதபோது, தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்திப்பார்கள். அம்பானி, அதானியின் ஏஜென்டாக வேலை பார்க்கிறார் பிரதமர் மோடி. நாட்டின் ஜனநாயகம் ஒட்டுமொத்த தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது.
திருப்பூர், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பின்னலாடைத் தொழிலும், வேளாண்மை தொழில், கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய ஜனநாயகம் பேராபத்தில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார சந்தையில் ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஏற்றுமதி இருந்த நிலையில், வரி விதிப்புக்கு பின்னர் ரூ.4 லட்சத்து 38 ஆயிரம் கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த தொழில் துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்” என்று வைகோ வலியுறுத்தினார்.
திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பேசும்போது: ”இந்தியாவுக்கு எதிரான போரை அமெரிக்கா நடத்துகிறது. அமெரிக்காவின் அமைச்சர் பீட்டர் நவரோவ், ஊடகங்களுக்கு பேட்டி தரும்போது, இந்தியாவுக்கு ஏன் அதிக வரி என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார். அதில், ‘உக்ரைன் போரை மோடி நடத்துகிறார். பிராமணிய சுரண்டல் இந்தியாவில் நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்தார். இந்தக் கருத்தை அமெரிக்க அமைச்சர் சொல்கிறார்.
மன்மோகன் சிங் ஆட்சியில் கச்சா எண்ணெய் 108 டாலர் என்றபோதும் பெட்ரோல் விலை குறைவாக இருந்தது. ஆனால், இன்றைக்கு கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளபோது, பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மோடி, அமித் ஷா ஆகிய 2 பேர் இந்தியாவை விற்கிறார்கள். அம்பானி, அதானி என்ற 2 பேர் வாங்குகிறார்கள்.
அமெரிக்காவின் அத்துமீறலை தடுக்க மறுப்பதன் காரணம் ”சிலம்பை உடைத்து என்ன பயன்... அரியணையிலும் அதே கள்வன் தான்” என்று சிலப்பதிகாரத்தில் சொல்வது போல, வரியை போட சொன்னதே மோடிதான். இது தேசத்தின் மீது விதிக்கப்படும் போர்.
பாகிஸ்தான் போர் தொடுக்க உள்ளதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்ததால், நாங்கள் போர் தொடுத்தோம் என அமைச்சர் கூறுகிறார். பாகிஸ்தானுக்கு உதவி செய்பவர் ட்ரம்ப். இவ்வளவு நண்பனாகவும் எதிரியாகவும் ஒரு நபர் இருக்க முடியுமா?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேர்மை மற்றும் தேசபக்திக்கு முன்பு, மோடியின் தேபக்தி கேவலமானது. ஒட்டுமொத்த வரி விதிப்பை ஏற்க முடியாது என்று அப்போதே அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங். அதற்கு அவர் சொன்ன காரணம், ’ஒவ்வொரு துறை சாரந்த பொருட்களுக்கு வேண்டுமானால் வரி போட்டுக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக வரி விதிக்கக் கூடாது. அப்படி தனியாக பொருட்களின் மீது வரி போடும்போது, அதனை வேறு நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று’ மன்மோகன் சிங் தெரிவித்தார்.
மோடி தேசபக்தி உள்ளவராக இருந்தால் மன்மோகன் சிங் சொன்னது போல, தனித்தனி பொருட்களுக்கு வரி என மாற்றி புதுக் கொள்கையை வரையறுக்க வேண்டும். அதேபோல் சிறப்பு சலுகைகள் அடங்கிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். இதுபோன்ற மாற்றுத் திட்டங்களை கொண்டு வரும் வரை, மோடியை வரலாறு மன்னிக்காது” என்று ஆ.ராசா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT