Published : 02 Sep 2025 06:44 PM
Last Updated : 02 Sep 2025 06:44 PM
தொல்குடி வேளாண்மை மேலாண்மைத் திட்டம் ஐந்திணை: ஐந்திணை- தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மைத் திட்டத்தின்கீழ், கால்நடை வளர்ப்பு மூலம் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முன்னோடித் திட்டம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்துடன் (டானுவாஸ்) இணைந்து பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 1,000 பழங்குடியின குடும்பங்களை இலக்காகக் கொண்ட இத்திட்டம் பெண்கள், சுய உதவிக் குழுக்களின் திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின குடும்பங்கள் எதிர்கொள்ளும் கந்துவட்டி பிரச்சினைகள் இத்திட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது. குடும்பங்கள் நேரடியாக வங்கிகளுடன் இணைக்கப்படுகின்றன. திருவள்ளூரில், சுயஉதவிக் குழுப் பெண்கள் பலர் வங்கிக்கடன் பெற்று, ஆடு கொட்டகைகள், தீவனம் கொள்முதல் போன்ற தேவைகளை நிறைவேற்றியுள்ளனர்.
வங்கி மூலம் ரூ.13 லட்சம் கடன் பெற்ற 33 பெண்கள் பழைய கடன்களை அடைக்கவும் தொழில்களில் முதலீடு செய்யவும் உதவியுள்ளனர். அறிவியல்ரீதியான பயிற்சி மற்றும் கால்நடை மருத்துவ ஆதரவுடன் ஆடுகள் மற்றும் கோழிகளின் விநியோகம், குடும்பங்களின் வருமானத்தை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது.
கால்நடை வளர்ப்பின் மூலம் மாத வருவாய் ரூ.32,000 வரை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தினக்கூலியை மட்டுமே நம்பியிருந்த பெண்கள், இப்போது முட்டை, ஆட்டுக்குட்டி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பதன் மூலம் நிலையான வருமானத்தை ஈட்டுகின்றனர். ஆடு வளர்க்கும் குடும்பங்கள், கோழிப்பண்ணை வைத்திருப்போர் நிலையான வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.
கால்நடை விநியோகத்துடன், அவற்றின் பராமரிப்பு, நோய்த் தடுப்பு மற்றும் இனப்பெருக்க முறைகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. தொடர்ச்சியான பயிற்சி மற்றும் மேம்பாடு மூலம் கால்நடை வளர்ப்பை ஒரு லாபகரமான தொழிலாக பயன்பெற்ற குடும்பங்கள் கருதுகின்றன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளர் கூறும்போது, “நிலமற்ற பழங்குடியினருக்கும், விளிம்பு நிலை சமூகத்தினருக்கும் பொருளாதார நிலையை மேம்படுத்த இந்தத் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைப்பதை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது” என்றார்.
துர்கா (பொன்னேரி) - எனக்கு மூன்று பெண் ஆடுகளும், ஒரு ஆண் ஆடும் வழங்கப்பட்டன. இப்போது அந்த ஆடுகள் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளன. ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்கு வழி தெரியாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த எனக்கு, இந்த திட்டம் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. எங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் இந்தத் திட்டத்துக்காக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு என் நன்றி. வருங்காலத்தில் ஒரு பெரிய பண்ணை அமைப்பதே எனது லட்சியம்.
முருகம்மாள் (பழவேற்காடு) - ஆடு மற்றும் கோழிகளை வளர்த்து கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன். என் கணவருக்கு வேலை இல்லாத நேரங்களில் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தோம். இந்த திட்டம் மூலம் கால்நடை வளர்ப்பு குறித்து பயிற்சி பெற்றேன். 50 நாட்டுக் கோழிகளை வளர்த்து, மாதம் கணிசமான வருமானம் ஈட்டத் தொடங்கினேன். ஒரு கோழி ரூ.500 வரை விற்பனையாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT