Published : 02 Sep 2025 06:28 PM
Last Updated : 02 Sep 2025 06:28 PM

காவிரி குறுக்கே தடுப்பணை கட்ட நிதி இல்லையா? - திமுக அரசுக்கு பாஜக கேள்வி

சென்னை: காவிரி குறுக்கே தடுப்பணை கட்ட நிதியில்லையா என திமுக அரசுக்கு தமிழக பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

இது தொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் விடுத்த அறிக்கையில், “கரூர் மாவட்டம் மருதூர் மற்றும் திருச்சி மாவட்டம் உமையாள்புரம் இடையே காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டுமென்பது டெல்டா விவசாயிகளின் பல ஆண்டு கால கோரிக்கை. 2021-ம் ஆண்டு சட்டப்பேரவையில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் மருதூருக்கும் உமையாள்புரத்துக்கும் இடையே ரூ.750 கோடி செலவில் தடுப்பணை கட்டப்படும் என அறிவிப்பு வெளியிட்டது திமுக அரசு. ஆனால் எல்லா அறிவிப்புகளும் அறிவிப்புகளாகவே இருக்கும் இந்த அரசில் இந்த திட்டமும் விதிவிலக்கல்ல.

அந்த வகையில், நான்கு ஆண்டுகளுக்குப் பின் காவிரி டெல்டா விவசாயிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகளின் கோரிக்கை மனுவுக்கு பதிலளித்த நீர் வளத்துறையின் சிறப்புத் திட்டங்கள் பிரிவின் நிர்வாகப் பொறியாளர், நிதிப் பற்றாக்குறையால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இருக்கிறது. சட்டப்பேரவையில் நீர் வளத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவித்து, விவசாயிகளிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு ஆட்சி முடியும் தருவாயில் நிதியில்லை என்று கூறுவது எவ்வளவு அபத்தமானது?

விவசாயத்துக்கு தனி பட்ஜெட் என்று பெருமை கொள்ளும் இந்த ஆட்சியில், ரூ.750 கோடி திட்டம் என்பது ஒரு சுமையா? அறிவிப்புகளை மட்டுமே உற்பத்தி செய்து தள்ளும் அரசுக்கு விவசாயிகள் எப்போதுமே கண்ணுக்குத் தெரிவதில்லை. இந்த லட்சணத்தில் வரும் செப்.15-ம் தேதி கரூர் மாவட்டத்தில்தான் முப்பெரும் விழா என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்ற வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விளம்பரங்களுக்கு செலவு செய்த கோடிகளை, விவசாயிகளின் தடுப்பணைக்கு செலவு செய்திருக்கலாமே? காவிரியில் தடுப்பணை கட்ட வக்கில்லாத திமுகவுக்கு காவேரிக் கரையாம் கரூரில் முப்பெரும் விழா ஒரு கேடா?” என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x