Published : 02 Sep 2025 06:25 PM
Last Updated : 02 Sep 2025 06:25 PM
சிவகாசி: பாஸ்போர்ட் பெற பொதுமக்கள் தரகர்களை அணுக வேண்டாம். அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டால் பிரச்சினை இன்றி கடவுச்சீட்டு வழங்குவது எங்கள் கடமை. ஆன்லைனில் விண்ணப்பித்தால் கடவுச்சீட்டு வீடு தேடி வரும் என மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் கூறியுள்ளார்.
சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இரு நாட்கள் மொபைல் பாஸ்போர்ட் சேவை முகாம் தொடங்கியது. இதில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் கலந்து கொண்டு, விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கினார்.
அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: ”இந்திய வெளியுறவுத் துறை சார்பில் மொபைல் பாஸ்போர்ட் சேவை அறிமுகப் படுத்தப்பட்டது. மதுரை மண்டலத்தில் கடந்த ஜூன் மாதம் இந்த சேவை தொடங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக சிவகாசியில் இரு நாட்கள் மொபைல் பாஸ்போர்ட் வழங்கும் சேவை நடைபெற்று வருகிறது. மக்களை தேடி சென்று பாஸ்போர்ட் சேவை வழங்குவதே அரசின் நோக்கம்.
மக்கள் பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இந்த முகாமுக்கு சிவகாசியில் நல்ல வரவேற்பு உள்ளது. தேவைப் பட்டால் தொடர்ந்து இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படும். மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் 2 பாஸ்போர்ட் சேவை அலுவலகங்களும், 8 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.
ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரு அலுவலகம் உள்ளது. 15 கிலோ மீட்டருக்கு ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் உள்ளது. அலுவலகம் இல்லாத இடங்களுக்கு மொபைல் பாஸ்போர்ட் வாகனம் மூலம் சேவை வழங்கி வருகிறோம். மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் கடந்த ஆண்டு 2.70 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் 3 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். மதுரை மண்டலத்தில் மாதம் சராசரியாக 22 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தரகர்களை அணுகாமல், பாஸ்போர்ட் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டால் பாஸ்போர்ட் வழங்க வேண்டியது எங்கள் கடமை. ஆன்லைனில் விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் வீடு தேடி வரும்” என்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT