Published : 02 Sep 2025 02:26 PM
Last Updated : 02 Sep 2025 02:26 PM
பூந்தமல்லி: “தோல்வி பயத்தாலேயே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தால் எழுச்சியும் இல்லை, பலனும் இல்லை” என இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியின் இறுதிக் கட்ட பணிகளை இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, பணிகளை துரிதமாக முடித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார் அமைச்சர் சேகர்பாபு.
பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது: குத்தம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தில் இருந்து 300 சென்னை மாநகரப் பேருந்துகள், 600 எஸ்இடிசி பேருந்துகள், 50 கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள், 36 அண்டை மாநில பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த பேருந்துகளில், வார நாட்களில் 30 ஆயிரம் பயணிகளும், விடுமுறை காலங்களில் 40 ஆயிரம் பயணிகளும், விழா காலங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் பயணிப்பர். இந்த பேருந்து முனையம் வருகிற நவம்பர் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொடங்கியுள்ள சுற்றுப்பயணம் தோல்வி பயத்தையே காட்டுகிறது. அந்தப் பயணத்தால் எழுச்சியும் இல்லை, பலனும் இல்லை. ’மக்களைக் காப்போம்- தமிழகத்தை மீட்போம்’ என்பதற்கு பதிலாக, 'சம்பாதித்ததை காப்போம்- சம்மந்தியை மீட்போம்’ என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் பிரகாஷ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT