Published : 02 Sep 2025 06:30 AM
Last Updated : 02 Sep 2025 06:30 AM
சென்னை: சென்னை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக, சிறப்பாக பங்காற்றும் வகையில் செயல் புரிந்த 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜன.24-ம் தேதி) மாநில அரசின் சார்பில், சிறந்த பெண் குழந்தைக்கான விருது மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையுடன் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருதுக்கு பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களுக்கு தீர்வு காண ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற தகுதிகளை உடைய பெண் குழந்தைகள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், காவல்துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனம் ஆகியோர், இதுபோன்ற குழந்தைகளை கண்டறிந்து விருதுக்காக பரிந்துரைக்கலாம்.
விருதுக்கு விண்ணப்பிக்க http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் நவ. 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் கையேடு தயாரிப்பு குறித்த விளக்கம் மற்றும் படிவம் ஆகியவற்றை உரிய கருத்துருவின் நகல்களுடன் பூர்த்தி செய்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் டிச.1-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT