Last Updated : 02 Sep, 2025 11:45 AM

1  

Published : 02 Sep 2025 11:45 AM
Last Updated : 02 Sep 2025 11:45 AM

ஜெர்மனி முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்துக்கு ரூ.3819 கோடி முதலீடு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 1) ஜெர்மனியில் நடைபெற்ற ஜெர்மனி முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்துக்கு ரூ.3819 கோடி முதலீடுகளை உறுதி செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான TN Rising Europe முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3819 கோடி மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் 9,070 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இதன்மூலம், முதல்வர் ஸ்டாலினின் வருகையால் ஜெர்மனியில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் கையெழுத்திடப்பட்ட மொத்த முதலீடுகள் ரூ.7020 கோடியாக உயர்ந்து, 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

இதில் நார்-பிரெம்ஸ் (ரூ.2000 கோடி முதலீடு மற்றும் 3,500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்), நோர்டெக்ஸ் குழுமம் (ரூ.1000 கோடி முதலீடு மற்றும் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்), மற்றும் ஈபிஎம்-பாப்ஸ்ட் (ரூ.201 கோடி முதலீடு மற்றும் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்) ஆகிய முன்னர் கையெழுத்திடப்பட்ட மூன்று முக்கிய ஒப்பந்தங்களும் அடங்கும்.

முக்கியமாக, தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வரும் பல நிறுவனங்கள் மீண்டும் முதலீடுகள் செய்து விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள முன்வந்துள்ளன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன கூறுகள், தொழில்துறை உபகரணங்கள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் உலகளாவிய தலைவர்களை இந்த மாநாடு ஒன்றிணைத்தது. முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக வென்சிஸ் எனர்ஜி (ரூ.1068 கோடி முதலீடு மற்றும் 5,238 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்), பிஏஎஸ்எஃப் (ரூ.300 கோடி முதலீடு மற்றும் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்), பெல்லா பிரீமியர் ஹேப்பி ஹைஜீன் (ரூ.300 கோடி முதலீடு மற்றும் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்), ஹெர்ரென்க்னெக்ட் இந்தியா (ரூ.250 கோடி முதலீடு மற்றும் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்), பல்ஸ் (ரூ.200 கோடி முதலீடு மற்றும் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்), விட்சென்மேன் இந்தியா (ரூ.200 கோடி முதலீடு மற்றும் 450 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்) மற்றும் மாஷ் எனர்ஜி (ரூ.200 கோடி முதலீடு மற்றும் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்) ஆகியவை அடங்கும்.

சுகாதாரம் மற்றும் மருத்துவத் தயாரிப்புகளில் பெல்லா பிராண்டை தொடர்ந்து போலந்தை தளமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான பெல்லா ஹைஜீன், திண்டுக்கல் மாவட்டத்தில் அதன் நவீன சுகாதாரப் பொருட்கள் உற்பத்தி வசதியை விரிவுபடுத்துகிறது.

ஆட்டோமொபைல் துறைக்கான நெகிழ்வான உலோக குழல்கள் மற்றும் விரிவாக்க இணைப்பான்களில் முன்னணியில் உள்ள ஜெர்மன் நிறுவனமான விட்சென்மேன் குழுமம், தமிழ்நாட்டில் ஆட்டோமொடிவ் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கான உற்பத்தியை விரிவுபடுத்துகிறது.

பிஏஎஸ்எஃப் சுற்றுச்சூழல் கேட்டலிஸ்ட் மற்றும் மெட்டல் சொல்யூஷன்ஸ் (ECMS) அதன் செங்கல்பட்டு உற்பத்தி ஆலையை விரிவுபடுத்துகிறது. இந்த நிறுவனம் வினையூக்கிகள், உறிஞ்சிகள், பேட்டரி பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற உலோக தீர்வுகளில் சேவைகளை அளித்து வருகிறது.

கியர் இல்லாத நேரடி இயக்கி தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஜெர்மன் காற்றாலை உற்பத்தியாளரான வென்சிஸ் எனர்ஜி ஏஜி, தமிழ்நாட்டில் காற்றாலை பாகங்கள் உற்பத்தி ஆலையை அமைக்கிறது.

சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹெர்ரென்க்னெக்ட், அதன் சென்னை ஆலையை விரிவுபடுத்துகிறது. மும்பை கடற்கரை சாலை மற்றும் சென்னை மெட்ரோ போன்ற திட்டங்களை இந்நிறுவனம் அதன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் மூலம் செயல்படுத்தும்.

முதல்வர் ஸ்டாலின் பிஎம்டபிள்யூ குழுமத்தின் மூத்த தலைவர்களுடன் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடினார். அப்போது ஆட்டோமொடிவ் மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாட்டின் சிறப்பினை எடுத்துரைத்து, பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் செயல்பாட்டை தமிழ்நாட்டில் அதிகப்படுத்திட அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின்போது, பிஎம்டபிள்யூ குழும நிறுவனத்தின் மூத்த தலைவர்கள், தமிழ்நாட்டின் வலுவான மின்சார வாகன உட்கட்டமைப்பை மேற்கோள் காட்டியது, மாநிலத்தின் மீதான அந்நிறுவனத்தின் ஆர்வத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.

ஜெர்மனியின் இரட்டை தொழில் பயிற்சி மாதிரியை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்காக நெக்ஸ்ட் மிட்டல்ஸ்டாண்ட் (ஆஸ்பில்டங்) உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 120 மாணவர்களுடன் தொடங்கி அடுத்த பத்தாண்டுகளில் 20,000 ஆக அதிகரிக்கும் இந்த திட்டம், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே உலகளாவிய திறன் தரத்தை உயர்த்தும்.

தமிழக முதல்வரின் ஐரோப்பா பயணம் அடுத்த கட்டமாக இங்கிலாந்து நாட்டில் தொடரும், அங்கு மேலும் பல முதலீட்டாளர்கள் சந்திப்புகள் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்வுகளும் நடைபெறும்.

இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x