Published : 02 Sep 2025 05:50 AM
Last Updated : 02 Sep 2025 05:50 AM
சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு முகாம்களை அதிக எண்ணிக்கையில் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக உயர் அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை நந்தனத்தில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் முன்னெடுப்புகளான கல்லூரிக் கனவு திட்டம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிலையங்களில் திறன் பயிற்சி வழங்குதல், ஸ்கவுட் திட்டம், தமிழ்நாடு திறன் போட்டிகள், நிரல் திருவிழா (Hackathon), தமிழ்நாடு மாநில அளவிளான வேலைவாய்ப்பு திட்டம் (TNSLPP), உயர்வுக்குப்படி திட்டம், நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் (குடிமைப்பணித் தேர்வு, ஊக்கத் தொகை திட்டம் மற்றும் எஸ்எஸ்சி, வங்கி பணியாளர் தேர்வு வாரிய போட்டித் தேர்வுகளுக்கான உறைவிடப் பயிற்சி ஆகியவற்றின் தற்போதைய முன்னேற்றம் குறித்து துணை முதல்வர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்படும் கல்லூரிகளை தேர்ந்தெடுத்து ஊக்குவிக்க வேண்டும். 2026-ல் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் சர்வதேச திறன் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த தேவையான உயர்தர தொழில்நுட்ப பயிற்சியை வழங்க வேண்டும். நிரல் திருவிழா 2.0 மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்களை அதிகப்படுத்தி அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின்கீழ் அரசுப் பணிகளில் பணிவாய்ப்பு பெறுபவர்களின் தேர்ச்சி எண்ணிக்கையை அதிகப்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர்கள் அவர்கள் விரும்பும் வேலைவாய்ப்பை பெறும் வகையில் திறன் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை துணை முதல்வர் வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் கிராந்தி குமார் பாடி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT