Published : 02 Sep 2025 12:58 PM
Last Updated : 02 Sep 2025 12:58 PM
எந்த ஆட்சியாக இருந்தாலும் அரசியல் தெரிந்த அமைச்சர்கள் அடுத்த தேர்தலிலும் தாங்கள் ஜெயிப்பதற்கான அடித்தளத்தை அதிகாரத்தில் இருக்கும் போதே போட்டுவைப்பார்கள். ஆனால், விவரமாக அப்படி செயல்படாததால், 2021-ல் அமைச்சராக இருந்தும் தோற்றுப் போனார் கே.சி.வீரமணி. அப்படி அதிகாரத்தைத் தொலைத்தவர், பட்டும் திருந்தாமல் இருப்பதாக ஆதங்கப்படுகிறார்கள் திருப்பத்தூர் மாவட்ட அதிமுககாரர்கள்.
அதிமுக ஆட்சியில் பசையுள்ள பத்திரப்பதிவுத் துறைக்கு அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. பத்தாண்டு காலம் அமைச்சராக இருந்த இவர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்ட அதிமுக-வை தனது பிடிக்குள் வைத்திருந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சிக்குள் தனது செல்வாக்கை மேலும் வளர்த்துக் கொண்ட வீரமணி, தனக்கு போட்டியாக வருவார்கள் என்று கருதியவர்களை எல்லாம் ‘கவனமாக’ பார்த்துக் கொண்டதாகவும் தகவல்கள் உண்டு. இதனால், முன்னாள் அமைச்சர்களான பாண்டுரங்கன், வி.எஸ்.விஜய், நிலோபர் கபீல், எம்.எஸ்.சந்திரசேகரன் உள்ளிட்டவர்கள் அரசியலில் தங்களுக்கான இடத்தைத் தொலைத்தார்கள்.
இப்போது திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராக இருக்கும் வீரமணி, 2021-ல் ஜோலார்பேட்டை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். “இந்த 3 மாவட்டங்களில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லப் போகும் வேட்பாளர் அண்ணனாகத்தான் இருப்பார்” என அப்போது வீரமணியின் விசுவாச வட்டம் தம்பட்டம் போட்ட நிலையில், திமுக-விடம் 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார் வீரமணி.
இப்படியான அதிர்ச்சித் தோல்வியை எதிர்பார்க்காத வீரமணி இம்முறை, விட்ட இடத்தைப் பிடிக்க கணக்குப்போட்டு காய் நகர்த்தி வருகிறார். அதேசமயம், தேர்தல் தோல்வியை படிப்பினையாகக் கொள்ளாமல் இன்னமும் தன்னை அமைச்சராகவே நினைத்துக் கொண்டு பழைய மனநிலையிலேயே இருக்கிறார் வீரமணி என்று திருப்பத்தூர் மாவட்ட அதிமுக-வினர் புலம்புகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “தேர்தல் தோல்வி என்பது அரசியலில் சகஜம். ஆனால், ஒருமுறை தோற்றால் அதிலிருந்து பாடம் படித்துக்கொள்ள வேண்டும். ஆனால், வீரமணி அப்படி படித்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அதனால் தான் இன்னமும் கட்சிக்காக உழைக்கும் உண்மையான விசுவாசிகளை ஒதுக்கிவைத்துவிட்டு தனக்கு வேண்டப்பட்ட சிலரை மட்டும் உடன் வைத்துக் கொண்டு அரசியல் நடத்துகிறார். இப்படி இருந்ததால் தான் கடந்த முறை தோற்றுப் போனோம் என்பதை இன்னமும் அவர் உணரவில்லை.
இப்படியான செயல்பாடுகளால் தான் கடந்த முறை இந்த மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் மூன்றை திமுக கைப்பற்றியது. வாணியம்பாடியிலும் முஸ்லிம் லீக் வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால் அங்கேயும் அதிமுக தோற்றுப் போயிருக்கும். இதெல்லாம் தெரிந்திருந்தும் வீரமணி தரப்பினர் திருந்தியபாடில்லை.
கடந்த நான்கரை ஆண்டுகளில் மாவட்டச் செயலாளர் பதவியைத் தவிர வேறெந்த பதவியும் இல்லாமல் இருக்கும் வீரமணி, அதனால் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. அதனால் தான் இம்முறை எப்படியாவது ஜெயித்தாக வேண்டும் என்பதற்காக கட்சி நிர்வாகிகளை தேடிச்சென்று குசலம் விசாரிக்கிறார். ஆனால், கடந்த நாலரை ஆண்டுகளில் வீரமணியின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதை நாங்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை.
மருத்துவர் பசுபதி அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக வேலூரில் போட்டியிட்டார். கட்சிக்காக சொத்தை எல்லாம் அடமானம் வைத்து செலவழித்த அவர், எம்பி தேர்தலில் தோற்றுப் போனாலும் எம்எல்ஏ தேர்தலில் தனக்கு கட்சி வாய்ப்பளிக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரை கட்சிக்குள் முன்வரிசைக்கு வரவிடாதபடிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். களநிலவரத்தைப் புரிந்து கொள்ளாமல் இப்படி அனைவரையும் ஓரங்கட்டி உட்காரவைக்கும் அரசியலை இன்னமும் செய்து கொண்டிருந்தால் இந்த மாவட்டத்தில் அதிமுக வெற்றி என்பது கேள்விக்குறியாகி விடும் என்பதை தலைமையும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து மருத்துவர் பசுபதியிடம் பேசியபோது, “கட்சிக்குள் நான் புறக்கணிக்கப்படுவதாக யாரோ வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். மக்களவைத் தேர்தலில் நிறைய செலவாகிவிட்டதால் கொஞ்சம் பொருளீட்ட வேண்டி இருக்கிறது. அதனால் பாதி நேரம் மருத்துவத் தொழில், மீதி நேரம் அரசியல் என ஓடிக்கொண்டிருக்கிறேன். எடப்பாடியார் பிரச்சாரப் பயணம் வந்தபோது கூட அவர் கூடவே தான் இருந்தேன். கே.சி.வீரமணி எங்கள் தொகுதிக்கு வரும்போது அவரையும் சந்தித்துப் பேசி வருகிறேன். 2026-ல் அதிமுக வெற்றிக்காக நாங்கள் அனைவரும் ஒன்றாக உழைக்கத் தயாராகவே இருக்கிறோம்” என்றார்.
கே.சி.வீரமணியிடமும் பேசினோம். “திருப்பத்தூர் மாவட்டம் மட்டும் அல்ல... தமிழகம் முழுக்கவே இம்முறை அதிமுக தான் வெற்றிப்பெறும். அதற்கான வேலைகளை நாங்கள் தொடங்கி விட்டோம். தற்போது நிகழ்ச்சி ஒன்றில் இருப்பதால் இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு இல்லை” என்று மட்டும் சொன்னார் அவர்.
தனது மாவட்டத்தில் தன்னைப் போல் செல்வாக்கான ஒருவர் ஜெயித்துவிட்டால் அடுத்த கட்ட அரசியல் வளர்ச்சி அவரை நோக்கிப் போய்விடுமே எனப் பதறுபவர்கள், கட்சி தோற்றுப் போனால் ஆட்சி அதிகாரமே கைக்கு வராதே என்று ஒரு கணம் சிந்தித்தால் எந்தக் கட்சியிலுமே செல்வாக்கான மனிதர்களை செல்லாக்காசாக்க துணிய மாட்டார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT