Published : 01 Sep 2025 10:37 AM
Last Updated : 01 Sep 2025 10:37 AM
திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது.
மாவட்டத்தில் சராசரியாக 4 செ.மீ. மழை பெய்தது. இம்மழை, செங்குன்றம், தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் கனமழையாகவும், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு ஆகிய இடங்களில் மிதமான மழையாகவும், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பூண்டி, ஜமீன் கொரட்டூர் ஆகிய இடங்களில் லேசான மழையாகவும் பெய்தது.
இம்மழையால் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் உள்ள சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் புழல், பூண்டி, சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 595கன அடி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 360 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 225 கன அடி, சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 30 கன அடி என, மழைநீர் வரத்து உள்ளது.
வேகமாக நிரம்பும் ஏரிகள்: அதுமட்டுமின்றி, பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு விநாடிக்கு 135 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 250 கன அடி, ஆந்திர மாநிலம்- கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 420 கனஅடி என நீர் வரத்து உள்ளது.
எனவே, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 3,058 மில்லியன் கன அடியாகவும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2,455 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அதேபோல், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,075 மில்லியன் கன அடியாகவும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 172 மில்லியன் கன அடியாகவும் உள்ளது என, நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT