Published : 01 Sep 2025 10:17 AM
Last Updated : 01 Sep 2025 10:17 AM
ஆவடி: ஆவடி அருகே கோயில்பாதாகை பகுதியில் கழிவுநீர் கலந்த மழைநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள கோயில்பதாகை, கலைஞர் நகர் முதல் கன்னடபாளையம் வரை, ஆவடி- வாணியன்சத்திரம் நெடுஞ்சாலையின் இருபுறமும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில், சுமார் ரூ.22 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
இந்த மழைநீர் வடிகால்வாயில், கோயில்பதாகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து கழிவுநீரும் விடப்படுகிறது. அதுமட்டுமின்றி, கால்வாய் பகுதியில் சில இடங்கள் உடைக்கப்பட்டுள்ளன. உடைக்கப்பட்ட கால்வாய் பகுதிகளில் இருந்து, மழை காலங்களில் கழிவு நீர் கலந்த மழைநீர் வெளியேறுகிறது.
அவ்வாறு வெளியேறும் நீர், கோயில்பதாகை- எம்சிபி அவென்யு, கிருஷ்ணா அவென்யு, மங்களம் நகர், பாலாஜி நகர், பிளாட்டினம் சிட்டி, டிரினிட்டி அவென்யு ஆகிய குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நிற்பது தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் ஆவடி மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை என, கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையால் கழிவுநீர் கலந்த மழை நீர், கோயில்பதாகை- எம்சிபி அவென்யு, கிருஷ்ணா அவென்யு, மங்களம் நகர், பிளாட்டினம் சிட்டி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நின்றது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று கோயில்பதாகையில், ஆவடி-வாணியன்சத்திரம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்த ஆவடி காவல் உதவி ஆணையர் கனகராஜ், ஆவடி டேங்க் பேக்டரி காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அவர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பொதுமக்களின் கோரிக்கை குறித்து பேசினர். அப்போது, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ‘மழை நீர் வடிகால்வாயில் உடைக்கப்பட்ட பகுதிகளை அடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என, உறுதியளித்தனர்.இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT