Published : 01 Sep 2025 09:44 AM
Last Updated : 01 Sep 2025 09:44 AM
சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் 2 வாரங்களைத் தாண்டி நீடித்து வருகிறது. கோரிக்கையை நிறைவேற்று வதற்கான கால வரையறையை அரசு அறிவிக்காத வரை போராட்டம் தொடரும் என சிஐடியு தெரிவித்துள்ளது.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சார்பில் மாநிலம் முழுவதும் கடந்த 18-ம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. சென்னை, பல்லவன் சாலையில் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல் துறையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக கோரிக்கைகளில் ஒன்றான ஓய்வு பெற்றவர்களுக்கு (2024 ஏப்ரல் வரை) பணப்பலனும் வழங்கப்பட்டது.
ஆனால், இதுவரை ஓய்வு பெற்ற அனைவருக்கும் பணப்பலன் வழங்கப்படவில்லை. எனவே, அனைவருக்கும் பணப்பலன் வழங்குவதற்கான காலவரையறையை மட்டுமாவது நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி, 2 வாரங்களாகப் போராட்டம் நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. சென்னையில் அயனாவரம், வடபழனி ஆகிய பணிமனைகளில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற ஊழியர்கள் கூறும்போது, “கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த அதே தவறு, திமுக ஆட்சியிலும் நடக்கிறது. மத்திய அரசு நிதி வழங்காததால் கூட்டாட்சித் தத்துவம் பாதிக்கப்படுவதாக முதல்வர் கூறுகிறார். ஆனால் அவரே எங்கள் பணத்தை வைத்திருக்கிறார். புதிய ஓய்வூதியத் திட்ட மசோதா ஆதரவிலேயே அதிமுகவும், திமுகவும் இரட்டை நிலைப்பாடு எடுத்திருக்கின்றன. எனவே, மாபெரும் போராட்டங்கள் மூலமாகவே போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை வென்றெடுக்கமுடியும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT