Published : 01 Sep 2025 08:54 AM
Last Updated : 01 Sep 2025 08:54 AM
திருப்புவனம்: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் பயன் தராது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தை சந்தித்து ஜி.கே.வாசன் ஆறுதல் கூறினார். மாநில தொண்டரணித் தலைவர் அயோத்தி, முன்னாள் எம்எல்ஏ உடையப்பன், மாவட்டத் தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ராஜலிங்கம், கவுன்சிலர்கள் பாரத்ராஜா, வெங்கடேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மக்கள் கொடுத்த மனுக்கள் வைகை ஆற்றில் மிதக்கின்றன. இதன் மூலம் அந்த திட்டத்தின் உண்மை முகம் வெளியே வந்துள்ளது. இது வாக்கு வங்கிக்கான திட்டம் என்பதை காட்டுகிறது. இதற்கு காரணகர்த்தா என்று கூறி, சில அதிகாரிகளை அரசு பலிகடா ஆக்கியுள்ளது.
அஜித்குமார் மரணத்துக்குப் பிறகும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. காவல் துறை தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள், பழனிசாமியின் வெற்றிகரமான சுற்றுப் பயணம் போன்றவற்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்களால் தமிழகத்துக்கு முழுமையான பயன்கள் கிடைக்கவில்லை. இது தொடர்பான வெள்ளை அறிக்கையும் வெளியிடப்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில், முதல்வரின் தற்போதைய வெளிநாட்டுப் பயணம் பயன் தராது. திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.
ஆடு, மாடு, மரங்களுக்கு மாநாடு நடத்திய சீமானை பாராட்டுகிறேன். அவரது செயல்பாட்டை கொச்சைப்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT