Published : 01 Sep 2025 08:11 AM
Last Updated : 01 Sep 2025 08:11 AM
திருச்சி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வரும் 3-ம் தேதி சுவாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி,
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரேயுள்ள ஹெலிபேடு தளத்தில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு நாளை (செப்.2) வருகிறார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நாளை மறுநாள் (செப். 3) சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு காலை 10.55 மணிக்கு வருகிறார். அவரை ஆட்சியர் வே.சரவணன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். தொடர்ந்து, பகல் 12.10 மணியளவில் ஹெலிகாப்டரில் திருவாரூர் சென்று, தமிழ்நாடு மத்திய பல்கலை. 10-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
பின்னர், திருவாரூரில் இருந்து மாலை 4.30-க்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றின் பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலை 5.20-க்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு செல்கிறார். அங்கு சுவாமி தரிசனம் செய்யும் திரவுபதி முர்மு, மாலை 6 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார்.
அதேநேரத்தில், மாலை 6 மணிக்கு முன்னதாக தரிசனம் முடிந்தால், ஹெலிகாப்டர் மூலமே அவர் திருச்சி விமான நிலையம் செல்வார் என்று கூறப்படுகிறது. திருச்சி விமான நிலையத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு, இரவு 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
5 அடுக்கு பாதுகாப்பு… குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு ரங்கம் பஞ்சக்கரை ஹெலிபேடு தளத்தை தஞ்சாவூர் ஹெலிபேடு பிரிவு அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு செய்தனர். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம், ரங்கம் பஞ்சக்கரை, ரங்கநாதர் கோயில் மற்றும் அவர் காரில் செல்லும் வழிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் வருகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.1) காலை 10 மணியளவில் திருச்சி விமான நிலையத்திலும், பகல் 11 மணிக்கு ரங்கம் கோயிலிலும் நடைபெற உள்ளன. இந்தக் கூட்டங்களில் ஆட்சியர் வே.சரவணன், காவல் ஆணையர் என்.காமினி, மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் மற்றும் விமான நிலைய அதிகாரிகள், அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT