Published : 01 Sep 2025 08:40 AM
Last Updated : 01 Sep 2025 08:40 AM
சென்னை: அதிமுக தேமுதிக கூட்டணி ஒப்பந்தத்தில் மாநிலங்களவை சீட் தருவதாகக் கூறி பழனிசாமி நம் முதுகில் குத்திவிட்டார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நிர்வாகிகள் மத்தியில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் தேமுதிக தென்சென்னை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியதாவது:
செப்டம்பர் மாத இறுதிக்குள் பூத் கமிட்டி பணிகளை நிறைவு செய்ய வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கடினமாக உழைக்க வேண்டும். மேலும், அதிமுக-வுடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தபோது 5 மக்களவை தொகுதிகளும், 1 மாநிலங்கவையும் ஒதுக்குவதாக தெரிவித்தனர். ஆனால் அந்த சீட் நமக்கு கொடுக்கவில்லை. சீட் தருவதாக கூறி பழனிசாமி நம்மை முதுகில் குத்திவிட்டார். முதல்வராக இருந்தவர், கட்சி தலைவராக இருக்கிறார், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என
நம்பினோம். ஆனால் ஏமாற்றிவிட்டார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை, அதேபோலதான் தேமுதிகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட வேண்டாம் என இபிஎஸ் கேட்டார். அதனால் நம்பிக்கையின் பேரில் கையெழுத்திட்டோம். அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம். பழனிசாமியின் பிரச்சார கூட்டத்துக்கு காசு கொடுத்து தான் அழைத்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், “தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறுகிறதோ அந்த கூட்டணிதான் 2026 தேர்தலில் அமோக வெற்றி பெறும். சட்டப்பேரவையில் பிரேமலதா எனும் நான் என்ற குரல் 2026-ல் ஒலிக்கபோவது உறுதி” என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு பயணம் செப்.5-ம் தேதி திருவண்ணாமலையில் தொடங்கும். விஜயகாந்த்துக்கும், மூப்பனாருக்கும் 40 ஆண்டுகால நட்பு இருந்தது. எங்களது திருமணம் மூப்பனார் மற்றும் கருணாநிதி தலைமையில்தான் நடந்தது. அந்த அடிப்படையில் தான் நேற்று நடைபெற்ற நிகழ்வில் தேமுதிக கலந்துகொண்டது.
முதல்வரின் வெளிநாடு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். அவரது பயணம் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதத்தில் உபயோகமாக இருக்க வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் கூட்டங்களுக்கு காசு கொடுத்து ஆட்கள் வரவழைக்கப்படுகின்றனர் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அனைத்து கட்சி கூட்டங்களுக்கும் காசு கொடுத்துதான் மக்களை அழைத்து வருகின்றனர். இதில் தேமுதிக விதிவிலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT