Published : 01 Sep 2025 10:18 AM
Last Updated : 01 Sep 2025 10:18 AM

எத்தனை முறை வந்தாலும் எங்களுக்காக என்ன செய்தார் முதல்வர்? - தடாலடி கேள்வி எழுப்பும் தருமபுரி பாஜக!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கடந்தமுறை அதிமுக கூட்டணி தான் கைப்பற்றியது. இம்முறை அதை உடைக்க நினைக்கிறது திமுக. அதற்காகவே இதுவரை அரசு முறை பயணங்களையும் சேர்த்து 6 முறை இந்த மாவட்டத்துக்கு வருகை புரிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனாலும், இம்முறையும் இங்கே திமுக கூட்டணிக்கு வேலை இல்லை என்கிறது அதிமுக கூட்டணி.

அண்​மை​யில் தரு​மபுரிக்கு வருகை தந்த முதல்​வர், இந்த மாவட்​டத்​துக்கு கடந்த நாலரை ஆண்​டு​களில் பலமுறை வந்து போயிருப்​ப​தையே பெரு​மித​மாக பேசி​னார். இதை விமர்​சிக்​கும் எதிர்க்​கட்​சிகள், “கடந்த முறை மாவட்​டத்​தில் 5 தொகு​தி​களும் கைநழு​விப் போனது​போல் இம்​முறை​யும் போய்​விடக் கூடாது என்​ப​தற்​காகவே தரு​மபுரிக்கு அடிக்​கடி வந்து போகி​றார் முதல்​வர். ஆனால், எத்​தனை முறை வந்​தோம் என்​பதை விட மாவட்​டத்​துக்​காக என்ன செய்​தோம் என்​பது தான் முக்​கி​யம்” என்​கி​றார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய தரு​மபுரி மாவட்ட பாஜக முன்​னாள் தலை​வ​ரான பாஸ்​கர், “மகளிர் உரிமைத் தொகை திட்​டம், இணை​ய​வழி பயிர்க் கடன் திட்​டம் ஆகிய​வற்றை தரு​மபுரி மாவட்​டத்​தில் தான் தொடங்கி வைத்​த​தாக முதல்​வர் பெரு​மையோடு சொல்​கி​றார். இவற்​றைத் தொடங்கி வைக்க தரு​மபுரிக்கு ஏன் வரவேண்​டும்​... கோட்​டை​யில் இருந்​த​படியே தொடங்கி வைத்​திருக்​கலாமே? இதைத் தவிர்த்து இந்த மாவட்​டத்​துக்கு மட்​டுமே ஆன சிறப்​புத் திட்​டங்​கள் எதை​யும் ஸ்டா​லின் தரவில்​லை​யே?

சிறிதும் பெரிது​மாக மாவட்​டத்​தில் 8 அணை​கள் இருந்​தும் போதிய நீர்​வளம் இல்​லை. இதனால், வளமான விளைநிலங்​கள் இருந்​தும் விவ​சா​யம் செய்​ய​முடிய​வில்லை. அதனால் இங்​குள்ள மக்​கள் பிழைப்​புத் தேடி வெளி மாவட்​டங்​களுக்​கும் மாநிலங்​களுக்​கும் போகி​றார்​கள். ஒகேனக்​கல் உபரி நீரேற்​றும் திட்​டத்​தைச் செயல்​படுத்​தி​னால் மழைக் காலத்​தில் மாவட்​டத்​தின் அனைத்து நீர்​நிலை​களும் பஞ்​சமில்​லாமல் நிரம்​பி​விடும். ஆனால், இதற்​காக திமுக ஆட்சி இது​வரை சிறு துரும்​பைக்​கூட கிள்​ளிப் போட​வில்​லை.

இளைஞர்​களுக்கு வேலை வாய்ப்​பளிக்​கும் சிப்​காட் திட்​டத்​துக்கு இது​வரை ஒரே ஒரு சாலை மட்​டுமே போட்​டிருக்​கி​றார்​கள். நாலரை ஆண்​டு​களில் இது மட்​டுமே அவர்​களால் முடிந்​திருக்​கிறது. இந்த லட்​சணத்​தில், வெளி​நாடு​களில் இருந்து தமி​ழ​கத்​துக்​கான தொழில் முதலீடு​களை அதிக அளவில் ஈர்த்​துள்​ள​தாக அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா ஜம்​பமடிக்​கி​றார்.

குடிநீர் பற்​றாக்​குறையை போக்​கிட இரண்​டாம் கட்ட ஒகேனக்​கல் குடிநீர் திட்​டத்தை ரூ.8 ஆயிரம் கோடி​யில் மேற்​கொண்டு வரு​வ​தாக முதல்​வர் சொல்​கி​றார். ஆனால், அதற்​கான பணி​கள் எங்கே நடக்​கின்றன என்று யாருக்​கும் தெரிய​வில்​லை. மத்​திய அரசுக்கு நற்​பெயர் கிடைத்​து​விடக் கூடாது என்​ப​தால் பிரதமர் வீடு கட்​டும் திட்​டத்​துக்​கும் பலவழிகளி​லும் முட்​டுக்​கட்டை போடு​கி​றார்​கள். மக்​களுக்​கான திட்​டங்​களை செயல்​படுத்தி இருந்​தாலே முதல்​வர் இங்கு அடிக்​கடி வரவேண்​டிய அவசி​யமே இருக்​காது. அப்​படிச் செய்​யாத​தால் தான் அடிக்​கடி வந்து போகி​றார். ஆனால், மக்​களின் தேவை​களை நிறை​வேற்​றாமல் இன்​னும் எத்​தனை முறை அவர் இங்கு வந்து போனாலும் தரு​மபுரி மக்​கள் ஏமாற​மாட்​டார்​கள்” என்​றார்.

பாஸ்​கர்

இதுகுறித்து நம்​மிடம் பேசிய திமுக முன்​னாள் எம்​பி-​யான மருத்​து​வர் டி.என்​.​வி.செந்​தில்​கு​மார், “இந்த மாவட்​டத்​தில் கடந்த முறை 5 தொகு​தி​களி​லும் திமுக தோற்​ற​தால் அதை சரிசெய்ய தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தரு​மபுரிக்கு அடிக்​கடி வரு​வ​தாக எதிர்​கட்​சி​யினர் தவறாகப் பிரச்​சா​ரம் செய்​கின்​ற​னர். ஆனால், அவர் முதல்​வர் ஆவதற்கு முன்​பிருந்தே தரு​மபுரிக்கு முக்​கி​யத்​து​வம் அளித்து வரு​கி​றார். வரலாற்​றுச் சிறப்பு மிக்க திட்​டங்​களை தரு​மபுரி மண்​ணில் இருந்து தொடங்கி வைப்​ப​தில் முதல்​வ​ருக்கு தனி பிரி​யம். அதோடு, மாவட்​டத்​துக்​கான பல முக்​கிய திட்​டங்​களை நிறை​வேற்​றி​யும் தந்​துள்​ளார்.

இன்​னும் பல திட்​டங்​களை நிறை​வேற்​ற​வும் தனி கவனம் செலுத்தி வரு​கி​றார். இதையெல்​லாம் அவர் தேர்​தல் கண்​ணோட்​டத்​தில் செய்​வ​தாக இருந்​தா​லும் அதிலொன்​றும் தவறில்​லை​யே. ஒரு கட்​சி​யின் தலை​வ​ராக, தன் கட்​சிக்கு செல்​வாக்கு குறை​வாக உள்ள பகு​தி​களில் கட்​சியை வலுப்​படுத்​து​வதுடன், மக்​களுக்​கான நலத்​திட்​டங்​களை​யும் வழங்கி வரு​கி​றார். பாஜக-வுக்கு தேர்​தல் நேரத்​தில் மட்​டுமே தமி​ழ​கம் கண்​ணுக்கு தெரி​கிறது. இந்​தச் சூழலில், மக்​கள் நலனில் அக்​கறை கொண்ட எங்​கள் தலை​வரை பாஜக-​வினர் விமர்​சிப்​பது வேடிக்​கை​யாகத்​தான் உள்​ளது” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x