Published : 01 Sep 2025 07:09 AM
Last Updated : 01 Sep 2025 07:09 AM
சென்னை: ஆயத்த ஆடை தொழிலில் ஏற்பட்டுள்ள தொய்வைப் போக்க முதல்வர் ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க அரசு உயர்த்தியுள்ள இறக்குமதி வரியால் பாதிப்படைந்துள்ள திருப்பூர் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமரை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில்களுக்கு தமிழக அரசு ஏற்படுத்திய இடையூறுகள், பிரச்சினைகள் ஏராளம். அதனால், அந்தத் தொழில்கள் ஏற்கெனவே நலிவடைந்துள்ளது என்பதே உண்மை.
நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இயங்கும் ஜவுளித் தொழிலுக்கு எந்த வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கவில்லை. உள்நாட்டு முதலீடுகளும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்கின்றன.
கழிவுப் பஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் நூலிழைகளைப் பயன்படுத்தி காடா துணி, கலர் நூல்களில் போர்வை, மெத்தை விரிப்பு போன்றவற்றை உற்பத்தி செய்யும் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள், உற்பத்தி நிறுத்தப் போராட்டங்களை நடத்தின. இவர்களின் கோரிக்கைகளை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை.
திமுக ஆட்சியில் தமிழகம் பாழடைந்ததை மறைக்க, எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது ஸ்டாலின் பழிபோடுகிறார். அமெரிக்காவின் தற்போதைய கூடுதல் வரி விதிப்பால், நம் நாட்டில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு, அதிமுக சார்பில் நான் கடிதம் எழுதியுள்ளேன்.
அதில், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், தொழில் துறைக்கு நிவாரணம் அளிக்கவும், கடன் மற்றும் வட்டியை 6 மாதங்களுக்கு நிறுத்திவைக்கவும், வட்டியை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுத்து, தொழிலாளர்கள் வேலையிழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.
அமெரிக்காவில் இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள், கூடுதல் வரி செலுத்த வேண்டும். இதனால் இந்திய பின்னலாடை அமெரிக்க சந்தையில், பிறநாட்டு ஜவுளிப் பொருட்களுடன் போட்டியிட முடியாமல் விற்
பனை குறையும். எனினும், தமிழகத்தில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தங்கு தடையின்றி உற்பத்தி செய்தால்தான், பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும். நமது நாட்டுக்கும் அந்நியச் செலாவணி கிடைக்கும்.
ஆயத்த ஆடை தொழிலில் ஏற்பட்டுள்ள தொய்வைப் போக்க தமிழக அரசு உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT