Published : 31 Aug 2025 10:53 AM
Last Updated : 31 Aug 2025 10:53 AM
சென்னை: மொத்தம் 10 முதலமைச்சர்களைக் கொண்ட பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது; அனைத்துத் தரப்பினரின் வெறுப்பையும் பெற்றுள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா டுடே வார இதழ் சார்பில் இந்தியாவில் 10 மக்களவைத் தொகுதிகளுக்கும் கூடுதலாக உள்ள மாநிலங்களை ஆளும் முதலமைச்சர்களில் சிறப்பாக செயல்படுபவர் யார்? என்பதை அறிவதற்காக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முதலிடத்தையும், சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் இரண்டாவது இடத்தையும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். மொத்தம் 10 முதலமைச்சர்களைக் கொண்ட பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கவில்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களிடம் அம்மாநில முதலமைச்சரின் செயல்பாடு எவ்வாறு உள்ளது? என்பது குறித்து கருத்துக் கேட்டு அவர்கள் அளிக்கும் ஆதரவின் அடிப்படையில் தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தயாரிக்கப்பட்ட இதேபோன்ற பட்டியலில் 36% ஆதரவுடன் எட்டாவது இடத்திலும், 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 57% ஆதரவுடன் இரண்டாம் இடத்திலும் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த முறை முதல் 10 இடங்களில் வர முடியாத அளவுக்கு செல்வாக்கை இழந்திருக்கிறார்.
சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் பத்தாம் இடத்தைப் பிடித்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்சிங் மான் 29.9% மக்கள் ஆதரவைப் பிடித்திருக்கிறார். அப்படியானால், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதை விட குறைவான ஆதரவு தான் இருப்பதாகப் பொருள் ஆகும். 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 57% மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த மு.க.ஸ்டாலின் இப்போது அதில் பாதியளவுக்கும் குறைவான ஆதரவை மட்டுமே பெற்றிருக்கிறார் என்பதிலிருந்தே, அவரது செல்வாக்கு எவ்வளவு வேகமாக சரிந்து வருகிறது என்பதை அறியலாம்.
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது; அனைத்துத் தரப்பினரின் வெறுப்பையும் பெற்றுள்ளது என்று நீண்டகாலமாகவே கூறி வருகிறேன். இப்போது அது உண்மயாகி விட்டது. 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மு.க.ஸ்டாலினின் செல்வாக்கு மேலும் குறையும். ஆட்சிப் பொறுப்பில் இருந்து அவர் தூக்கியெறியப்படுவார் என்பதையே இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதையே இவை வெளிப்படுத்துகின்றன. விடியல் தரா ஆட்சி வீழட்டும்” இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT