Published : 31 Aug 2025 09:46 AM
Last Updated : 31 Aug 2025 09:46 AM
சென்னை: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை யாரும் விமர்சிக்க வேண்டாம். நமது ஒரே எதிரி திமுக என மனதில் கொண்டு தேர்தல் பணியாற்றுங்கள் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அளவில் பாக கிளை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இதுவரை எந்த பணிகளையும் கட்சி சார்பில் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த பாக கிளைகளை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் பழனிசாமி பேசியதாவது: கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படுத்தும் வகையில் தேவையற்ற விவாதங்களை, பேச்சுகளை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும். கூட்டணி தொடர்பான விவாதங்களையும் பொதுவெளியில் பேசுவதையும், சமூக வலைத்தளங்களில் பரப்புவதையும் தவிருங்கள். அண்மைக் காலமாக அண்ணாமலை நம்மை பற்றி எதுவும் பேசுவதில்லை. நீங்களும் அவரை பற்றி எதுவும் பேச வேண்டாம்.
நமது ஒரே எதிரி திமுக என்பதை மனதில் கொண்டு அனைவரும் உற்சாகமாக தேர்தல் பணியாற்றுங்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான பணிகளை இன்னும் வேகப்படுத்துங்கள். விஜய் கட்சி புதிய கட்சி. அக்கட்சி வளர்ச்சிக்காக விஜய் ஏதாவது பேசுவார். அதை யாரும் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நான் 3 கட்ட பிரச்சார பயணத்தை முடித்திருக்கிறேன். இதில் ஏராளமான மக்களை சந்தித்தேன். அவர்கள், ஆளும் திமுக ஆட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். களம் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளதை கண்டேன். இதுவரை சென்ற 118 தொகுதிகளில் நிச்சயம் 100 தொகுதிகளுக்கு மேல் நாம் வெற்றி பெறுவோம்.
வாக்குச்சாவடி அளவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாக கிளை நிர்வாகிகளுக்கு வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது, வாக்குச்சாவடி நிகழ்வுகள், ஆள் மாறி வாக்களிப்பதை தடுப்பது, உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சியை வழங்க வேண்டும்.
அந்தந்த வாக்குச்சாவடி அளவில் உள்ள சுமார் 1,000 வாக்காளர்களுக்கு, இந்த பாக கிளைகளில் உள்ள தலா 9 நிர்வாகிகளும் பரிச்சயமானவர்களாக மாறுவதற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதை முறையாக செய்தாலே 2026 தேர்தலில் அதிமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றும் வரை மக்களும் ஓயமாட்டார்கள், நாமும் ஓயக்கூடாது. இவ்வாறு பேசினார்.
இக்கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணைப் பொதுச்செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT