Published : 31 Aug 2025 09:02 AM
Last Updated : 31 Aug 2025 09:02 AM
சிவகங்கை: தமிழகத்தில் நாளை (செப். 1) முதல் காலி மது பாட்டில்களை வாங்க உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகங்கை உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, டாஸ்மாக் ஊழியர் சங்க (சிஐடியு) மாவட்டத் தலைவர் குமார் தலைமை வகித்தார்.
இதில், டாஸ்மாக் ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் முருகன் பேசியதாவது: செப். 1-ம் தேதி முதல் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற வேண்டுமென அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். ஆனால், பெரும்பாலான கடைகள் 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்டவையாக உள்ளன. அவற்றில் மதுபாட்டில்களை வைக்கவே போதிய இடமில்லாத நிலையில், காலி மதுபாட்டில்களை எங்கே வைப்பது.
மேலும், பாட்டில்கள் உடைந்து விட்டால் அதற்கு ஊழியர்கள் பணம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே மேலாண்மை இயக்குநர் தலைமையில் குழு அமைத்து, ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்த பின்னரே காலி பாட்டில்களை வாங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், எங்களிடம் எந்த குறையும் கேட்கவில்லை. மேலும், காலி பாட்டில்களை வாங்கிக்கொண்டு, ரூ.10 கொடுக்கச் சொல்கின்றனர். விற்பனை நடந்துகொண்டிருக்கும்போது அதை செயல்படுத்துவதில் சாத்தியமில்லை. இதனால், காலி பாட்டில்களை வேறு விதங்களில் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்று வழி அவசியம்: பார்களிலிருந்து சேகரித்து வழங்கப்படும் பாட்டில்களுக்கு உடனே பணமாக திரும்ப வழங்கவும் அனுமதியில்லை. பல குழப்பங்களுடன் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு வேகம் காட்டி வருவதால் சிக்கல் அதிகரிக்கவே செய்யும். தொழிலாளர்கள் மனதளவில் கடும் பாதிப்புக்குள்ளாவர். எனவே, காலி பாட்டிங்கள் கொள்முதல் செய்ய மாற்று வழியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT