Published : 30 Aug 2025 09:08 PM
Last Updated : 30 Aug 2025 09:08 PM

“திமுக ஆட்சியின் தவறுகளை தைரியமாக சுட்டிக் காட்டுங்கள்” - அதிமுக இளம் பேச்சாளர்களுக்கு பழனிசாமி அறிவுரை

சென்னை: திமுக ஆட்சியின் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டுங்கள் என்று அதிமுக இளம் பேச்சாளர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார்.

அதிமுக மாணவரணி சார்பில் ‘உரிமைக்குரல்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சாளர்கள் 217 பேருக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 5 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்று, பேச்சாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியது: “தேர்தல் நெருங்கி விட்டது. சரியான நேரத்தில் நம் இளம் பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறீர்கள். இந்த காலக்கட்டம் ஒரு முக்கியமான காலக்கட்டம். தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் காலம்தான் இருக்கிறது. இந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டால் எதிர்காலம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

மேடையில் பேசுகின்றபோது மிகவும் ஜாக்கிரதையாக, எச்சரிக்கையாக, புள்ளி விவரத்தோடு பேச கற்றுக்கொள்ள வேண்டும். சொல்கின்ற கருத்து வலிமையாக இருக்க வேண்டும். இங்கு வந்திருக்கும் இளம் பேச்சாளர்கள் எந்த ஒரு அச்சமுமின்றி பேசுகிறார்கள். கருத்துகளை அழகாக அற்புதமாக வழங்கியிருக்கிறீர்கள். உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அந்தளவுக்கு பயிற்சியை வழங்கியிருக்கிறார்கள்.

திமுக ஆட்சியின் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டுங்கள். உங்களுக்கு முழுமையாக நான் துணை நிற்பேன். தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக. பொன் விழா கண்ட கட்சி. நம்முடைய படை வலிமையான படை, வீரமிக்க படை. உறுதி மிக்க படை, எதற்கும் அஞ்சாத படை. அத்தனையும் உங்களுக்கு துணை நிற்கும்.

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அற்புதமான திட்டங்களையும், திமுக ஆட்சியின் தவறுகளையும் மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். இதுவே நமக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும்” என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைநிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x