Published : 30 Aug 2025 06:25 PM
Last Updated : 30 Aug 2025 06:25 PM

கோயில்களில் அறங்காவலர் நியமனத்திலும் அனைத்து சாதியினருக்கும் வாய்ப்பு தேவை: கிருஷ்ணசாமி

கோப்புப் படம்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் பரம்பரை அறங்காவலர் நியமனத்தில் அனைத்து சாதியினருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: “சாதி கொடுமைக்கு எதிராக உயிர்த் தியாகம் செய்த இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை புதிய தமிழகம் கட்சி மனித உரிமை மீட்பு தினமாக கடந்த 34 ஆண்டு காலமாக அனுசரித்து வருகிறது.

அவரது நினைவு நாளில் ராமநாதபுரத்தில் லட்சக்கணக்கான மக்கள், அரசியல் கட்சியினர் கூடுவதால் அவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பழனிசாமியை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு 105 பேர் அடங்கிய ஒரு கமிட்டியை அமைத்துள்ளோம். நினைவேந்தலில் சிரமமமாக பங்கேற்க அரசியல் கட்சி நிர்வாகிகள் எங்கள் ஒருங்கிணைப்பாளரை அணுகலாம்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. கோயில்களுக்குச் சொந்தமான 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீட்க வேண்டும். கோயில் நிலங்களை மீட்க இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பு பாபு நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனாலும் இன்னும் நிறைய கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டியுள்ளது.

பிரசித்திபெற்ற சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக் கடன், காணிக்கை பொருட்கள், தலைமுடி போன்றவற்றை கையாள்வதில் ரூ.7 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. அங்கு கோயில் பூசாரியே அறங்காவலராக உள்ளார். பரம்பரபரை அறங்காவலராக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்தக் கோயிலில் நடந்துள்ள முறைகேட்டை கண்டித்தும் அறங்காவலர்களை பணிநீக்கம் செய்யக் கோரியும் எனது தலைமையில் சாத்தூரில் செப்டம்பர் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு கூறுகிறது. எனவே, இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் பரம்பரை அறங்காவலர் நியமனங்களிலும் அனைத்து சாதியினருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

பிஹாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து தாழ்த்தப்பட்டோர் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து கேட்கிறீர்கள். தகுதியுள்ள வாக்காளர்களை நீக்குவதும், தகுதியில்லாத வாக்காளர்களை சேர்ப்பதும் தவறுதான். அதில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று பார்க்க தேவையில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதிலும், நீக்குவதிலும் தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவருக்கு வாழ்த்துகள். ஆனால், தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வருவதுடன் அவற்றால் உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

வெளிநாட்டு நிறுவனங்கள் தூய்மைப்படுத்தும் வேலை, கடினமான வேலை, பெரிய பெரிய பொருட்களை தூக்கும் வேலை போன்றவற்றுக்கு உள்ளூர் மக்களை பயன்படுத்துகின்றன. ஆனால், மேற்பார்வையாளர் வேலை மற்றும் அதற்கு மேற்பட்ட வேலை என்று வரும்போது, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்கின்றன. எனவே, வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்துக்கு வரும்போது உள்ளூர் மக்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கையால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்காவை மட்டும் சார்ந்திராமல் இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். அதோடு லாபத்தை குறைத்து உள்ளூர் சந்தையிலும் பொருட்களை விற்பனை செய்ய முன்வர வேண்டும். 142 கோடி மக்கள் தொகை கொண்ட உள்நாட்டு சந்தை மிகப் பெரியது என்பதை அவர்கள் உணர வேண்டும்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x